உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

67

இறப்பித்தல்’ என்னும் பொருளும் உண்டு. எது தன்னிடத்து நின்றும் ஒன்றனைத் தோற்றுவிக்கின்றதோ, அதுவே அதனைத் தன்கண் ஒடுக்கிக் கொள்வதற்கும் இடமாய் நிற்கின்றது. மண்ணினின்றுந் தோன்றிய குடம் உடைந்தவழி அம் மண்ணாய்ப் போதல் போல வென்க. மா என்பதோடுய் என்னும் ஓரெழுத்துச் சேர்ந்து மாய் என நிற்பின் அஃது இறத்தல் என்னும் பொருளைக் காட்டும். இம் மாய் என்னும் முதனிலையிற் றோன்றி எப் பொருளும் மாய்ந்து ஒடுங்குதற்கு இடமாதலின் மாயை எனப்பட்டதென்று உரைத்தலுமாம். இனி மா என்னும் உரிச்சொல் கருமை என்னும் பொருளை யுணர்த்த லின் கரிய இருளைப்போற் பொருளுண்மை தெரியாமல் மறைக்கும் வஞ்சனை பொய் மயக்கம் முதலான பொருள்களை யுணர்த்தும் ‘மாயம்’ என்னுஞ் சொல் இவ்வுரிச்சொல் முதனிலையினின்று பிறந்த தொன்றாம்.

அன்னை என்னும் பொருளை யுணர்த்தும் மா என்னுஞ் சொல்லும், கருமை என்னும் பொருளை யுணர்த்தும் மா என்னுஞ் சொல்லும் வடிவால் ஒத்திருத்தலின், அவ் வொப்புமை பற்றி மாயம் மாயை என்னுஞ் சொற்களுக்கு வஞ்சனை பொய் மயக்கம் என்னும் பொருள்களும் வழங்கி வரலாயின. அங்ஙன மாயினும், உலகங்களுக்கும் உடம்புகளுக்கும் பிறப்பிடமாகிய பொ ருளை யுணர்த்தும் மாயை என்னுஞ் சொல்லும், வஞ்சனை பொய் மயக்கம் என்னும் பொருள்களைத் தரும் மாயை மாயம் என்னுஞ் சொற்களும் வேறுவே றென்றே உணர்ந்துகொள்க. இவ்வேறு பாடு அறியாதார் மாயை என்னும் சொல் பொய் என்னும் பொருளை யுணர்த்தலின், உலகு உடம்புகளுக்கு முதற் பொருளான மாயையும் பொய்யென்று உணரற்பாற் றென்பர். முதற் பொருண் மாயை பொய்யாமென்பது வேத உபநிடதங் களில் யாண்டும் பெறப்படாமையானும், உலகுடம்புகளுக்கு முதலான அது பழைய மறைகளினும் மறை முடிவுகளினும் பிரகிருதி என்றே வழங்கிவந்ததாகச், சுவேதாசுவதர உபநிடதத்தின் கண்மட்டும் அப்பிரகிருதி ஒரோவிடத்து ‘மாயை' எனக் கூறப்படுதலானும், இச்சொல், 'தாயகம்' எனப் பொருள்பட்டு எல்லா மொழிகளுக்கும் பொதுவான ‘மா’ என்பதிலிருந்து பிறத்தலானும், தனித்தமிழ் மொழியாய்க் கருமை எனப் பொருள்படும் மா என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த ‘மாயம்’ ‘மாயை' என்னுஞ் சொற்களோடு இதனையும் வடிவொப்புமைபற்றி ஒன்றாய் வழங்கல் ஏலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/100&oldid=1589292" இலிருந்து மீள்விக்கப்பட்டது