உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

79

யுணரப்படாமையானும், உணரும் உணர்வின் உள்ளிருந்து அவன் காட்டுதலானும் அவன் அவர்தம் உயிரினுக் குயிராய் விளங்க அறியப்படுவானல்லது கட்டுணர்வுக்குப் புலனாகான் என்பது தெரித்தற்கு அவ்வா றோதினார். இஃது யாங்ஙனம் எனின், புறப்பொருள்களின் வேறாய் நின்று அவற்றைக் காணுங் கண்தான் அவற்றைக் காணுமாறு தன்னுள் நின்று தன்னை ஏவும் உள்ளத்தைக் காணாது. அதுபோலத் தனக்கு வேறாயுள்ள வற்றை அறியும் உயிர் தன்னையறியாது, தன்னுள் நின்று ஏவும் முதல்வனையும் அறியாது, மற்றுத் தன் நினைவினளவாய்த் தன்னையுந் தன்றலைவனையும் உணரப்பெறும். இவ்வியல்பு,

“காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக் கட்டாய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய கள்வன்றான் உள்ளத்திற் காண்

என்னுஞ் சிவஞானபோதத் திருவெண்பாவால் நன்கு விளக்கப்பட்டமை காண்க. அற்றேற், கட்டுணர்வாய் அன்றி நினைவினளவாய் உணரும் உணர்ச்சி தெளிவுடைத்தாமோ வெனின்; கட்டுணர்ச்சி அறிவில்லாத பருப்பொருள்களின் சிற்றளவினையும் அவற்றின் றன்மைகளுள் ஒரோ வொன்ற னையும் அறியும். அங்ஙனம் அறியும் வழியும் அவற்றின் உண்மையை உணராமற் பிழைபடுதலும் உடைத்து. மற்று நினைவளவாய் உணரும் உணர்ச்சியோ நினைக்கும் உயிராகிய தன்னை முற்றும் தெளிய அறிவதோடு, தன்னுள் நின்று இயக்கும் பேரறிவுப் பொருளான முதல்வ னியல்பையும் உணரவல்லதாகும். அதனால் நினைவளவாயுணரு முணர்ச்சியே சிறந்த தென்று கடைப்பிடிக்க. எனவே, மெய்யறிவு முதிர்ச்சி யுடையார்க்கும் இறைவன் பிரித்தறிய வாராமல் அவரறிவோடு ஒற்றித்து நின்றே நினைவினளவாய் அறியப்படு மென்பது அறிவித்தாராயிற்று.

நுணுக்குதல் கூரிதாக்குதல்; இப்பொருட்டாதல் "பொய்யாதின்றிப் புலமை நுணுக்கி நீ” என்பதன் உரையிலுங் காண்க*.(* சீவகசிந்தாமணி)

'புணர்வு'உடம்போடும் உலகத்துப் பொருள்களோடுங்

கூடி நின்று இருவினைகளை விளைத்து நுகர்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/112&oldid=1589305" இலிருந்து மீள்விக்கப்பட்டது