உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

.

83

எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்” தாவது*. (* பரிமேலழகியார் உரை திருக்குறள் மெய்யுணர்தல் 8) அப்பெற்றித்தாகிய மெய்ப் பொருளை இடைவிடாது பாவிப்பவர் அம் மெய்ப் பொருடா னாய் விளங்குவராதலின் 'மெய்யானார்’ எனவும், அங்ஙனம் அம்மெய்ப் பொருளைக் கண்டார் “மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர்” ஆதலின் மீட்டிங்குவந்து வினைப் பிறவிசாராமே எனவும் அடிகள் அருளிச் செய்வாராயினர். ஈண்டுக் காட்டிய வாற்றால் திருவாதவூரடிகள் கருத்தும் திருவள்ளுவநாயனார் கருத்தும் ஒத்த தன்மையவாதலும் கடைப்பிடித் துணரல் வேண்டும்.

‘கள்ளம்” என்பது வஞ்சித்துக்கொள்ளுதல். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளில் நிற்கும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்துணர்வுகளும் ஐம்புலங்களாம். ஈண்டு அவ்வைம்புலங்களும் அவற்றின்வழித் தோன்றுகின் ற ஐந்து அவாக்கள் மேலாயின. இவ்வைம்புல நுகர்ச்சிக்குரிய பொருள்கள் தம்பாலின்றிப் பிறர்பால் உளவாகக்கண்டு அவற்றை நேரே கொள்ளுதற்குரிய நெறியாற் கொள்ளாது அவரை வஞ்சித்துக் கொள்ளுமாறு அவற்றின்பாற் செல்லும் அவா ஒருவரை ஏவுதலின் ‘கள்ளப்புலம்' என்றார். உடம்பு உளதாங்காறும் பண்டைப் பயிற்சியால் துறக்கப்பட்டபுலன்கள் மேலும் ஒரோவழி நினைவு செல்லுதலின் இவ்வுடம்பாகிய கட்டு நீக்கற்பால தென்பதூஉம், இது வராமை நீக்க வல்லவன் முதல்வன் ஒருவனே என்பதூஉம் அறிவுறுத்துவார் ‘கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே' என்று கூறினார்.

-

குரம்பை - சிறியமனை. இப்பொருட்டாதல் “குறியிறைக் குரம்பை”* (* புறநானூறு 129) என்பதன் உரையிற் காண்க. சிறியமனை போல்வ தாகிய உடம்பிற்கானது உவமையாகு பெயர்.

'குரம்பைக்கட்டு’ என்னுந் தொகைநிலைத் தொடர் குரம்பையது கட்டு என ஆறாம் வேற்றுமைப் பொருளினாதல், குரம்பையாகிய கட்டு எனப் பண்புத்தொகைப் பொருளினாதல் மயங்கும். இனிக் ‘குரம்பை கட்டழிக்க வல்லானே' என்பது பாடமாயன் குரம்பையைக் கட்டோடுஅழிக்க வல்லானே என்று பொருளுரைக்க; ஈண்டு ஒற்று மிகாமை "மெல்லெழுத்து மிகுவழி” என்னுஞ்சூத்திரத்தில் ‘அன்ன பிறவும்,' என்பதனால் அமைக்கப்படும்.* (* தொல்காப்பியம் எழுத்து 157)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/116&oldid=1589310" இலிருந்து மீள்விக்கப்பட்டது