உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

85

நெஞ்சத்தாமரையின் அகத்தேசென்று ஒடுங்கிக்கிடக்கின்றன. உயிரின் உணர்வால் இயக்கப்படும் எல்லாக்கருவிகளும் உயிரின் உணர்வும் ஒடுங்கி எல்லாம் இருண்டு கிடக்கும் அக்காலத்தும் நமதுடம்பினுள் ஓவாது இயங்குவது யாதென்று உற்றாராயு மிடத்து நெஞ்சப்பை ஒன்றுமே யென்பது தெற்றெனப் புலப்படும். நெஞ்சத்தாமரையினகத்து நடைபெறும் இவ் வியக்கம் நின்று போமாயின் உறங்கச்சென்ற உயிர் திரும்ப விழியாது.இ னி உயிர் விழித்திருக்குங் காலத்திலேயுங்கூட இந் நெஞ்சப்பையினி யக்கம் நின்றுபோமாயின் உயிர் உடம்பின்கண் நில்லாது. இங்ஙனம் விழிப்பு உறக்கம் என்னும் இருவகை நிலையினும் உயிரின் செயலாகவன்றி வேறு தனித்து நடைபெற்று உயிரை உடம்பின்கண் நிலைபெறுத்திவரும் இந்நெஞ்சப்பையின் இயக்கம் உயிரின் மேற்பட்ட இறைவனது ஆற்றலால் உந்தப்பட்டு வருகின்ற தென்பது இனிது விளங்கு கின்றதன்றே. உயிர் உணர்வுஞ் செயலும் ஒருங்கிழந்து துயிலும் நள்ளிருளில் றைவன் நெஞ்சத்தாமரை நடுநின்று திருக்கூத்தி யற்றும் இவ்வுண்மையினைத் தெளித்துக் காட்டுதற் பொருட்டே தில்லைக் கோயிலில் நள்ளிரவில் அம்பலக் கூத்தனுக்கு வழிபாடு ஆற்றப்படுகின்றது. இந்நிலவுலகத்திற்கு நெஞ்சத்தாமரையாய் வயங்குவது தில்லைக் கோயிலென்று மேயாகலான், அதன் வெளியிலே ஐயனியற்றும் அருட்கூத்து ஓவாது நடைபெறா நிற்கும். ஏனைக் கோயில்கள் உடம்பின்கண் உள்ள ஏனை உறுப்புகள் போல வேறு வேறிடங்களில் அமைக்கப்பட்டிருந்த தலால், நள்ளிரவில் அவற்றினுள்ளிருக்குந் திருவுருவங்களுக்கு வழிபாடு ஆற்றப்படுவதில்லை.

இங்ஙனம் நள்ளிருளில் ஆடும் இறைவன் திருக்கூத்தி னியல்பு தில்லைக்கண் நேரே காணப்படும் என்பார். 'தில்லையுட் கூத்தனே' என்றார்.

இறைவன் தமிழின் பொருட்டம் தமிழுணர்ந்த அன்பர் பொருட்டும் பல்வகைத் திருவிளையாடல்களும் இயற்றுதற்கு இடமாயதுபற்றித் 'தென்பாண்டி நாட்டானே' என்று கூறினார். பிறாண்டும் “பாண்டி நாடே பழம்பதியாகவும்” என்பர்.

இச்சிவபுராணத்து முதற்பத்தடிகளின் அடைவு மேலே காட்டினாமாகலின் ஏனையடிகளின் இயைபு ஈண்டுக் காட்டுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/118&oldid=1589312" இலிருந்து மீள்விக்கப்பட்டது