உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

93

மகேந்திரமதனிற் றோற்றுவித் தருளியும் என்று இயைக்க பண்டொருகால் இறைவன் மலையரையன் பாவைக்கு ஆகமம் என்னும் அறிவு நூற்பொருள்களை எடுத்து அறிவுறுப்ப, அவள் அவற்றைக் கருத்தூன்றாது, கேட்டனளாக, இறைவன் அது கண்டு பெரிதும் வெகுண்டு ‘நீ நம்மை யகன்று வலைஞர்க்கு மகளாய்ப் பிறந்திடுதி' என்று சபித்துரைத்தான். அன்னையை ஐயன் இங்ஙனஞ் சபித்துக் கூறக்கேட்ட மூத்த பிள்ளையார் பெருஞ் சீற்றமுடையராய்ப் போந்து இறைவன் திருக்கை யிலிருந்த அவ்வாகம நூல்களைப் பற்றிப் பிடுங்கிக் கடன்மீ தெறிந்திட்டார். இளைய பிள்ளையாரும் அங்ஙனமே கடுஞ்சின முடையராய்ப் போந்து அவ்வாகமங்களிற் சிலவற்றைப் பறித்தெடுத்துக் கிழித்தெறிந்திட்டார். இவையெல்லாங் கண்ட இறைவன் சினந்து இளைய பிள்ளையாரை நோக்கி ‘நீ நம் கையிலுள்ள நூலை வாங்கிக் கிழித்தெறிந்தமையால் மதுரை வாணிகனுக்கு ஒரு மூங்கைப் பிள்ளையாய்ப் பிறத்தி’ எனவும், அதன்பின் நந்தி தேவரை நோக்கி 'நீ இவ்விருவரையும் உள்ளே புகவிடுத்தமையாற் கடலிற் சுறவுமீனாய்ப் பிறந்து அங்கெறியப் பட்ட ஆகம நூல்களைச் சுமந்து உலவுதி' எனவும் சாபவுரை கூறினானாகச் சாபம் ஏற்ற அம்மூவரும் நடுங்கி இறைவனை இறைஞ்சி அச்சாபவிடுதி வேண்டிக் குரையிரப்பத், தானே நிலமிசைவந்து எல்லாருங் காண அம்மையைத் திருமணஞ் செய்து நந்தியை ஆட்கொள்ள இசைந்தருளினன்.

பின்னர் அம்மை வலைஞர் கோனுக்குத் திருமகளாய்ப் பிறக்க, நந்தி கொடிய சுறாவாய்க் கடலிற் றோன்றி வலை வீசுவார்க்கு அத்தொழில் நடவாவாறு துன்புற்று உலாவுவதாயிற்று. அம்மை மங்கைப்பருவத்தினள் ஆனதுணை யானே, ‘கடலில் அடங்காதுலவுங் கொடுஞ் சுறரைப் பிடித்துத் தருவாற்கு என் மகளை மணஞ்செய்து கொடுப்பல்' என்று வலைஞர்கோன் ஓர் உறுதிச்சொற் பிறப்பித்தான். மறஞ் சிறந்தார் பலர் அச் சுறவினைப் பிடிக்க முயன்றும் ஆகாமே சிலநாட்கள் கழியா நிற்பக் கடைமுறையாய் இறைவனே கண்ணுமனமுங் கவரும் ஓர் இளவலைஞனாய் தோன்றி அச்சுறவைப் பிடித்து அம்மையை வதுவை அயர்ந்தன னென்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவுளையாடற்புராணங் கூறா நிற்கும்.* (பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/126&oldid=1589320" இலிருந்து மீள்விக்கப்பட்டது