உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் 25

படைகளைத் திரட்டிக் கொண்டு அச்சோழ மன்னன்பாற் சென்று ‘நின் மகளை எனக்கு மணஞ் செய்து தாராயேல், என்னொடு போர்க்குவா' என்று அறைகூவ, அச்சோழன் அவனை எதிர்க்க அஞ்சி, அவற்கே தன்மகளைக் கொடுத்து அவனை மருமகனாக் கொண்டான்.அதன் பின்னர் அச்சோழன் வடநாட்டில் தனக்குப் பெரும் பகைவனாயிருந்த ஓர் ஆரிய அரசனை வெல்லும்பொருட்டுத் தன் மருகனோடும் படை யெடுத்துச் சென்று அவனைப் புறங்கண்டு மீண்டனன்.

மற்று, இச்சோழன் மருகனோ தான்பெற்ற வெற்றிகளால் இறுமாப்பு டையவனாகி, மதுரைமாநகரிற் செங்கோல் ஓச்சும் தன் தமையனை எதிர்த்து வென்று அவனது அரசுரிமை யினையும் வெளவுதற்கு எண்ணிச், சோழனுடன் படையெடுத்து மதுரை மேற் செல்லாநிற்ப, இவனது வருகையினை யுணர்ந்த பாண்டியன் பெரிதும் அஞ்சினனாகி இறைவனைத் தொழுது ஐயனே யான் வலியில்லேன், என் செய்கேன்!' என்று குறை யிரப்ப, ஆண்டவனும் அஞ்சாது சென்று அவனை எதிரிட்டுப் போர்செய்! யாம் நினக்கு வெற்றி தருகுவம் என்று சொல் பிறப்பிக்க, அப்பாண்டியனும் அதனால் மனவெழுட்சி யுடையனாய்ச் சென்று அவ்விருவரோடும் மலையாநின்றான். இரு திறத்தினர்க்கும் போர்மூண்டு நடக்கையில் கடுங்கோடை வெப்பம் அனலெனத் தீய்க்க அதனால் மாற்றார் படை நா வறண்டு இளைப்புற்றுப் போர்க்களத்தேர வீழ்ந்து மாய்ந்தது. மற்றுச் சிவபிராற்கு மெய்யன்பனான பாண்டியன்படை நின்ற பக்கத்தே ஒரு நறுமணத் தண்ணீர்ப்பந்தர் காணப்பட, அவனும் அவன் படைஞரும் அப்பந்தரிற் சென்று அங்கிருந்து ஓவாது நறுநீர் பருகத்தரும் ஒருவர்பால் எல்லாருங் குளிர்ந்த நறுமணநீர் பெற்றுப்பருகி அயர்வு தீர்ந்து கிளர்ச்சி பெற்றனர். அங்ஙனம் அயர்புதீர்ந்த பாண்டிய மன்னன்படை மாற்றார் படையை முற்றுந் தொலைத்துப் பகைவனாய்வந்த தம்பியையும் அவன் மாமனையுஞ் சிறைபிடித்து மீள்கையில் அத்தண்ணீர்ப் பந்தரைக் காணாதாயிற்று. வெற்றிபெற்று மீண்ட பாண்டியன் இறைவன் தனக்குத் செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந் துருகி வாழ்த்தினான் என்று இவ்வரலாற்றைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறாநிற்கும்.

பந்தல் ‘பந்தர்' என்றானது மொழியிறுதிப் போலி என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/151&oldid=1589362" இலிருந்து மீள்விக்கப்பட்டது