உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் - 25

வளவிலே, வந்த அப்பெரும்படையும் அப்படைஞர்க்குத் தலைவனும் ஒரு நொடிப் பொழுதிலே மறையக் கண்டு பாண்டியனும் சாமந்தனும் பிறரும் இறைவனருளை வாழ்த்தி வியந்தனரெனப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறா நிற்கும்.

காட்டு என்னும் முதலோடு இடு என்னுந் துணைவினை சேர்ந்து காட்டிடு என்று ஆய், இறந்த காலத்தின் பொருட்டுத் துணைவினை இரட்டிக் ‘காட்டிடு' என நின்றது. ஈண்டு மெய்க்காட்டிடுதலாவது படைகளின் உண்மையை உள்ளவாறு

காட்டுதல்.

‘தக்கான் ஒருவன்' என்றது வந்த அப்படைகளின் நடுவிற் படைத்தலைவனாய் நின்ற அறவோனை உணர்த்திற்று.

ஓரி ஊரின் உகந்தினி தருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்;

ஓரி ஊரின் உகந்து இனிது அருளி -ஓரியூரின்கண் விருப்பம் மிகுந்து இனிதாக அருள்செய்து, பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் இந்நிலத்திலேயும் பெருமை தங்கிய குழவியாகிய தன்மையும் என்றவாறு.

என்றது : முன்னொருகாற் பாண்டி நாட்டின்கண் ணுள்ள ஓரியூரில் வாழ்ந்த சைவமறையோர் ஒருவர் தாம் அரிதிற் பெற்ற அழகிய ஒரு பெண்ணைப் பிரமசாரியார் வரும் மறையோன் எவனாயினும் அவனுக்கு வாழ்க்கைப்படுத்துவேன் என்று உறுதி காண்டிருப்ப, திருமால்குடியிற் றோன்றிய ஓர் அந்தண இளைஞன் பிரமசாரியாய் ஒரு நாள் தனதில்லத்திற்கு வருதலும் அவனுக்கு உடனே தன் மகளை மணஞ்செய்து கொடுத்து அவனோடு அவளைப் போகவிட்டான். விடுப்ப, அவன் அவளொடும் தன்னூருக்குத் திரும்பித் தனது இல்லத்தே புகக் கண்ட அவன் அன்னை ஒரு சைவப் பார்ப்பனன் மகளை அவன் மணஞ்செய்து வந்தமை யறிந்து மன எரிவு மிக்காளாய் அப் பெண்மணியைத் தன் வீட்டின் ஓர் ஒதுக்கிடத்தே வைத்துக் கொடுமையாய் நடத்திவருவாள் ஆயினாள். அந்நங்கையை மணஞ்செய்துவந்தோனும் திருவருட் குறிப்பால் அவள்மேற் கருத்துவையாமல் நடந்துவரலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/157&oldid=1589373" இலிருந்து மீள்விக்கப்பட்டது