உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

151

பொய்கையும் அதன் தென்பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் ஒரு சிவலிங்கத் திருவுருவமும் இருக்கக்கண்டு பெருமகிழ்வுற்று அங்கே ஓர் இலைக்குடில் அமைத்துக் கொண்டு இறைவற்கு வழிபாடு ஆற்றி வருவாராயினார். நாடோறும் இறைவனை வழிபடுதற்கென்று பறிக்கும் பல நறுமணமலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தக்கால், அவற்றுட் பழையனவும் பழுது பட்டனவுமான பல மலர்கள் விரவியிருக்கக் கண்டு வருந்தி, 'விடிந்தபின் மலரெடுப்பின் அவை வண்டுகள் ஊதியனவாம்; இரவின்கட்சென்று எடுப்பேமெனில் மரமடர்ந்த இக்காட்ட கத்தே வழிபுலனாகாது; மரங்களில் ஏறினாலும் பனியாற் கால் வழுக்கும்; ஆகையால் என்செய்வேம்!" என்று மிக உள்ளங் குழைந்து வருந்த அவ் விளைய முனிவரெதிரே இறைவன் தோன்றினான்.

66

அவர் பெருமானை வணங்கி வாழ்த்தி “ஐயனே, தேவரீரை வழிபடுதற்பொருட்டு அடியேன் வைகறை யிற்சென்று மரங்களில் வழுவாமல் ஏறவேண்டுதலால் என் கை கால்கள் புலியின் வலிய நகங்கள் உடையவாகுக; வழிதெரிந்து ஏகுதற்கும் பழுதற்ற நறுமலர் தெரிந்து கொய்தற்கும் அவ்விரண்டிற் கண்களும் உண்டாகுக” என்று குறையிரப்பச் சிவபிரானும் அங்ஙனமே ஆமாறு தந்து மறைந்தருளினன். அன்று முதல் அவ்விளைய முனிவர் வியாக்கிரபாதர் அல்லது புலிக்கால் முனிவர் என்னும் பெயருடையராய்ச் சிவபிரானைத் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து வழிபார்ற்றி நன்கிருந் தனர். இங்ஙனம் புலிக்கான் முனிவர் வழிபட்ட காரணத்தானே தில்லை மாநகர் புலியூர் எனவும் வழங்கப்படலாயிற்று.

இவ்வாறிவர் இருக்கு நாளில் இவர் தந்தையார் மத்தியந்தின முனிவர் இவர்பாற்போந்து இவர்க்கு ஒரு நன் மங்கையை மணம் முடிக்கவேண்டுமென்னுந் தமது கருத்தை அறிவிக்க, அவரும் அதற்கு இசையவே வசிட்டமுனிவரின் தங்கையாரை அவர்க்கு மணமகளாக்கினர். அவரிருவரும் ஆற்றிய அருந்தவத்தால் உபமன்னியு வென்னும் ஓர் அருங் குழவி பிறந்தது. அக்குழவியை அருந்ததி எடுத்துப்போய்த் தம்பால் உள்ள காமமேனுவென்னுந் தெய்வஆன் பொழிபாலை ஊட்டி வளர்த்து வந்தனள். பின்னர்ப் புலிக்கான் முனிவரும் அவர் மனைவியாரும் மகவின் விருப்பத்தால் அதனைத் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/184&oldid=1589415" இலிருந்து மீள்விக்கப்பட்டது