உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

193

இனி

அளவிலாற்ற லுடையனாகலின் தான் வேண்டிற்றெல்லாம் வேண்டியவாறே படைத்தா னெனின், செய்வதுந் தவிர்வதும் ஆராயாது செய்யும் பித்தனுக்கும் அப்பெற்றியனான கடவுளுக்கும் வேறுபாடு சிறிதுமில்லையாம். இவ்வுலகத்தைப் படைத்ததனால் இறைவற்கு வரும் பயன் யாதுளது? அதனால் அஃது அவற்கு ஒரு விளையாட்டேயா மெனின், அற்றேல் அவன் அங்ஙனம் விளையாடும் ஒரு மழஇளங் குழவியே யாவன். அவரவர் செய்த வினைக்கீடாகப் படைப்ப னெனின், வினைசெய்வோர் முன்னரே உளராதல் போதரும், இவ்வாறெல்லாம் ஆயும்வழி இவ்வுலகம் பண்டு தொட்டு உளதென்பதே பெறப்படுதல் காண்க.

னி, இறைவன் உருவமுடையனா யிருப்பானெனின் அவ்வுருவத்தை அவற்குப் படைத்துக் கொடுத்தார். பிற ரொருவர் வேண்டப்படுவராகலானும், அங்ஙனம் அன்று, இறைவனே தான் விரும்பியவாறு உருவெடுப்பனெனின் உலகத்திலுள் ளாரும் அவ்வாறே தாம் விரும்பியபடியெல்லாம் உருவெடுப்ப ரெனக் கூறவேண்டுமாகலானும், உலகத்தவர்க்கு வரும் வடிவுகள் அவரவர்செய்த வினைக்கீடாக வருமெனின் உருவுடையார்க் கெல்லாம் வினையே முதலாய் நிற்குமென்பது பெறப்படுத லானும் இறைவனுக்கு முற்பட்டதூஉம் அவனிலும் பார்க்க வலியுடையதூஉம் வினையே யென்பது முடிக்கப்படும்.

இனி, இறைவன் அருவமாயே யிருப்பானெனின் அதுவும் பொருந்தாது. இடைவெளியைப் போல் அருவமா யிருப்ப தான்று தொழிற்பாடு இலதாகலின் அஃது உயிர்களைப் பிறவித் துன்பத்தினின்றும் எடுக்கமாட்டாது. எவ்வுயிருஞ் சென்று தங்குங் குளிர்நிழல் அருவமாயிருப்பினும் அஃது அவற்றிற்குத் தட்பத்தினைத் தந்து அயர்வு தீர்க்கக் காண்டுமா லெனின், அந் நிழலுந் தன்பால்வந்து அடைந்தவற்றிற்குப் பயன்றரக் காண்பதல்லது தானே சென்று அவற்றிற்கு அவ்வாறு உதவக் காணாமையின் அருவமாகிய நிழலுக்குந் தொழிற்பாடு இல்லையென்பதே துணிபொருளாமென்க. அஃதொக்கும், அருவமாகிய நிழல்போல் இறைவனும் அறிவிலனாயினன்றே அவற்குத் தொழிற்பாடில்லை யென்று கூறுதலாம்; மற்று அவன் பெரியதோர் அறிவுடையனாகலின் பிறப்பினை அஞ்சித் தன் மாட்டு வந்தடைந்தார்க்கு அவர் துன்பத்தை நீக்குவன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/226&oldid=1589458" இலிருந்து மீள்விக்கப்பட்டது