உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

197

னிச் சாங்கியமதம் உடையார் கூறுமாறு காட்டுதும். உலகமும் உலகத்தின்கண் உள்ள பொருள்களுந் தோன்றுதற்கு முதலாய் நிற்பதனைப் பிரகிருதி என வழங்குப. பிரகிருதி எனுஞ் சொல், வேறுபாடு உறாதது என்னும் பொருட்டாம். இஃது உலகமும் உலகத்துப் பொருள்களுமெல்லாந் தோன்றுதற்குத் தான் ஒரு முதலாயிருப்பதல்லது தான் ஒன்றிற் பிறவாமையான் இது மூலப்பிரகிருதி எனப்படுமெனவும், இதன் கட்டோன்றும் ஏனைப் பொருள்களெல்லாம் வேறுபாடுறுவனவா யிருத்தலின் அவை விகிருதி எனப்படமெனவும் உரைப்ப. பிரகிருதி பகுதி எனவும், விகிருதி விகுதியெனவுந் தமிழிற் றிரிந்து வழங்கும். மேலும், இம் மூலப்பகுதிகட் சத்துவம் இராசதம் தாமதம் என முக்குண தத்துவங்கள் உளவெனவும், அவை மூன்றும் ஒன்றி னொன்று மிகாது ஒத்துநின்ற நிலையே மூலப்பகுதி யாமெனவும் அறிதல் வேண்டும்.

ஈண்டுக் குணமென்றது ஒரு பொருளின் பண்பினையன்று. ஒரு பொருளின் றன்மை அப்பொருள்போற் பருவடிவிற்றன்றாய் நுண்ணுருவிற்றாய் நிற்குமாறு போலக் குணதத்துவ மென்பதூஉம் மிக நுண்ணிய இயல்பிற்றாய் நிற்றல் பற்றி அவ்வாறு குணம் எனப் பெயர் பெறலாயிற்று. இங்ஙனம் முக்குணவுருவிற்றாகிய மூலப்பகுதிகட் சத்துவகுணம் மிக்கு நிற்புழி மகத்* (மகத் என்பது தமிழில் மான் எனத் திரிந்து வழங்கும்) அல்லது புத்தி எனுந் தத்துவம் உண்டாம். ஈண்டுப் புத்தி என்றது அறிவினையன்று, அறிவினைக் கிளர்விக்கும் ஒரு நுண்பொருளேயாம். இப்புத்தி தத்துவத்தினின்று நான் என்னும் உணர்வினை எழுவிக்கும் அகங்கார தத்துவம் உண்டாம்; இவ்வகங்கார தத்துவம் மேற்கூறிய முக்கணக் கலப்பால் மூவேறுவகைத்தாய்நிற்க, அம்மூன்றினின்று அகக்கருவியாகிய மனமும், புறக்கருவிகளுள் அறிதலைச் செய்வனவாகிய மெய் வாய் கண் மூக்குச்செவி என்னும் ஐந்தும், தொழிலைச் செய்வனவாகிய நா கை கால் எருவாய் கருவாய் என்னும் ஐந்தும், ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் நுண்பொருள்கள் ஐந்தும், இவ்வைந்திலிருந்து வாள் வளி தீ நீர் மண் என்னும் பருப்பொருள்கள் ஐந்தும் ஆக இருபத்து மூன்று தத்துவங்கள் அல்லது பொருள்கள் ஒன்றினொன்று பரியனவாய்த் தோன்றும். இவ்விருபத்துமூன்று பொருள்களுள் மேல் நின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/230&oldid=1589462" இலிருந்து மீள்விக்கப்பட்டது