உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

❖ 25❖ மறைமலையம் – 25

நீக்குவதும் வினாவியதை உறுதிப்படுத்தலுமாம்; வழக்காவது இருபக்கத்தார் கூற்றினுள் ஒன்றெடுத்து அதனை ஐந்துறுப்புக் களான் ஆராய்ந்து உண்மையறிதற் கருவிகளுள் எதனானும் அதனை நாட்டி அதற்கு மறுதலையாயதைப் பெறப்பட்ட கோட்பாட்டிற் பிறழாமல் மறுப்பதாம்; அழி வழக்காவது வெற்றி பெறுதலையே பெரு நோக்காய்க் கொண்டு இழிக்கத் தக்க புல்லிய உரைகளால் எதனையும் எடுத்து மறுப்பது; இடக் காவது தான் சொல்லிய தொன்றும் நிலைநிறுத்தாது ஏனைப் பக்கத்தை மறுப்பதாம்; ஏதுப்பிழையாவது தனது மேற்கோளை நிறுவுதற்குத் தான் காட்டுங் காரணம் அதற்கு மாறான வேறொரு மேற்கோளை நாட்டுதற்கும் ஆவதூஉம், தான் கூறும் மேற்கோளுக்கு முரணாவதூஉம், மேற்கோளில் நாட்ட வேண்டு வதனையே கூறுவதூஉம், ஏதுவினுண்மையை நாட்டுதற்கு அது பிறிதோர் ஏதுவினை அவாவி நிற்பதூஉம், காலப்பிறழ்ச்சி யுடையதூஉமென ஐவகையாற் பிழைபடுவதாம், புரட்டாவது கூறுவோன் கருத்துக்கு மாறான ஒரு பொருளைக் கற்பித்தல்; விடைப்போலியாவது வறிதே ஒப்புமை பற்றிப் பொருந்தாவிடை கூறுதல்; தோல்வியுரையாவது தனது தோல்வியை மறைத்தற்குப் பொருளொடு பொருந்தாதவற்றைப் பேசுதல். இவற்றுள் விடைப்போலி இருபத்து நான்கு வகைப்படுமாறும், தோல்வி யுரை இருபத்திரண்டு வகைப்படுமாறும் அவற்றின் இயல்பும் நியாய சூத்திரம் ஐந்தாம் அத்தியாயத்துட் பரக்கக் கூறப் பட்டிருத்தலின் ஆண்டுக் கண்டு கொள்க; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும்.

இனி இவர்தங் கோட்பாடுகள் வருமாறு: உண்மை கூறுவோன் சொற்கள் உரையளவையென எடுக்கற்பாலன. ஒரு சொல்லுக்கும் அச் சொல்லால் உணர்த்தப்படும் பொருளுக்கும் யற்கையில் ஏதுந் தொடர்பில்லையென் றறியற்பாற்று; தொடர்புளதாயின் உணவு நெருப்பு கோடரி என்னுஞ் சொற்களைக் கேட்ட வளவானே பசிநீக்கமும் சுடுதற்றொழிலும் வெட்டுதற் றொழிலும் உடன்நிகழ வேண்டும். அற்றன்று ஆவென்னுஞ் சொல் ஒரு குதிரையையாதல் ஒரு குடத்தையாதல் உணர்த்தாது பசுவினையை குறிக்கக் காண்டலால், அச் சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் நிலைபெற்ற தொடர்பு இல்லை யென்றல் அமையா தெனிற் குழூஉக்குறிபோல இப்பொருளை அறிதற்கு இச்சொல்லென மக்கள் தம்முள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/233&oldid=1589466" இலிருந்து மீள்விக்கப்பட்டது