உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

201

இயற்கையை யமைத்த ஏற்பாட்டால் அஃதங்ஙனம் அதனை உணர்த்துகின்றதன்றிப் பிறிதில்லையென்க. அல்லதூஉம், ஒரு சொல் பலபொருள் பயத்தல் உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் உண்மையால் ஒரு சொல் ஒரு பொருளையே சுட்டும் இயற்கைத் தொடர்புடையதென்றல் பொருந்தாதென மறுக்க.

னி வேதமொழி விதியும் அர்த்தவாதமும் அநுவாதமும் என மூவகைப் பாகுபாட்டுள் அடங்கும். விதி எனினும் கட்டளை யெனினும் ஒக்கும்; அது “துறக்கம் வேண்டினோன் சோதிட் டோமம் வேட்க” என்றாற்போல வியங்கோட் பொருட்டாய் வருவது. அர்த்தவாதமாவது தன்வழி நிறுத்துதல், அது தான் புகழ்ந்து பேசுதலாலும் இகழ்ந்து கூறுதலானும் அச்சுறுத்துத லானும் பாராட்டுதலானும் நடை பெறுவது; “சருவ சித்து வேள்வியையாற்றுதலால் தேவர்கள் எல்லாரையும் வென்றார் கள், ஆதலாற் சருவசித்து வேள்வியைப் போல்வது பிறிதில்லை, அஃது எல்லாவற்றையும் நமக்குத் தருவது, எல்லாரையும் நாம் வெல்லும்படி செய்வது” என்னும் மறைமொழி புகழ்ச்சி பற்றி வந்தது; “சோதிட்டோமத்தை விடுத்து வேறொரு வேள்வியினை ஆற்றுவோன் ஒரு குழியின்கண் வீழ்ந்து பழுதுறுவான்” என்னுந் தொடர்மொழி இகழ்ச்சி பற்றி வந்தது: “அவிகொடுக்குங்கால் முதலிற் கொழுப்பினையும் அதன் பின் நெய்யினையும் எடுக்கற்பாற்று; ஆனால், ஐயோ! சரகக்குருக்கள் தீக்கடவுட்கு உயிர்போல்வதாகிய நெய்யினை முன்னெடுத்தார்!” என்பது அச்சுறுத்து மாற்றால் வந்தது; "இதனாற் பிராமணர் சாம கீதத்தைப் பாடினர்” என்பது பாராட்டுதல் பற்றி வந்தது.

அநுவாதமாவது விதிமொழித்தொடரிற் கட்டளையிடப் பட்ட தனைப் பெயர்த்தும் எடுத்துக் கூறுவது. விதிவாக்கியம் அர்த்தவாதவாக்கியம் அநுவாத வாக்கியம் என்பவற்றைக் கட்டளைத் தொடர் இணக்குமொழித் தொடர் வழிமொழித் தொடர் எனத் தமிழில் நிரலே மொழி பெயர்த்துக் கொள்க. வேதங்களைச் செய்த முனிவரர் உண்மையறிவுடையராத லானும், உயிர்களிடத்து மிகுந்த அன்பு உடையராதலானும், தாமறிந்த உண்மைகளைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வேட்கை பெரிதுடைய ராதலானும் அவராற் செய்யப்பட்ட அம் மறை மொழிகள் நம்பற்பாலன என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/234&oldid=1589467" இலிருந்து மீள்விக்கப்பட்டது