உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

203

மேலும், நினைக்கப் பட்ட பொருள்கள் பலவாயிருத்த லானும், அவற்றைப் பற்றிய நினைவுகள் அத்துணையும் ஓர் உயிரின்கண் நிலைப்பெற்று நிற்பினல்லது அவை மறித்தும் நினைக்கப்படுதல் செல்லாமை யானும் உயிரொன்று தனித்துளதென்பது தேற்றமேயாம். இனி, அகக்கருவியாகிய மனமே உயிரென்றலும் அமையாது, என்னை? மனம் ஓர் அணுவளவிற்றாகலானும் அணுவளவிற்றாகிய அது காண்டல் கேட்டல் அறிதல் உணர்தல் முதலாய பல தொழில்களை நிகழ்த்தும் வினைமுதலாதல் செல்லாமை யானும், எல்லா வற்றையும் அறியும் உயிரை அணுவளவிற் றென்றல் ஏலாமை யானுமென்பது. இனி, முன் நிகழ்ந்தவற்றை நிகைக்கும் நினைவால் ஒரு மகவின்மாட்டு அச்சமுந் துயரமும் மகிழ்ச்சியும் தோன்றக் காண்டலின் நிகழ்ச்சிகட்கெல்லாம் ஒரு பற்றுக் கோடாய் நிற்கும் ஓருயிர் தனியேயுண்டென்பது துணியப்படும். அற்றன்று, ஒரு தாமரை மலரின்கண் அதன் இதழ்கள் விரிந்து குவியுமாறு போல, அம்மகவின்மாட்டும் அந்நிகழ்ச்சிகள் இயற்கையாய்க் காணப்படுகின்றன வெனின்; நன்று சொன்னாய், அறிவில்லாப் பொருள்களில் உண்டாம் நிகழ்ச்சி வேறுபாடுகள் சூடு குளிர் மழை காலம் என்பவற்றின் மாறுதல் களாற் றோன்று வனவாகையால் அவைதம்மை ஈண்டைக்கு உவமையாகக் காட்டுதல் அடாது. இம்மையில் ஒரு மகவு பால்பருகுதற்கு விரையும்அவா அது மேலைப்பிறவியிற் பால் பருகிய பழக்கத்தால் நேர்வ தொன்றாகலின் என்பது.

அற்றன்று, காந்தக் கல்லினை இருப்பு ஊசி சென்று அடையுமாறு போலக் கண் பூவாக் குழவியும் தாயின் முலையைச் சென்று அடைகின்ற தெனின், இருப்பூசி காந்தகக் கல்லையன்றிப் பிறிதொன்றனைச் சென்றடையாமையானும், இளங்குழவி தாயின் முலையை யன்றிப் பிறிதொன்றனைச் சன்று சாராமையானும் இவ்வாறு இவை தத்தமக்கேற்ற பொருள்களைச் சார்தற்கு ஒரு காரணம் வேண்டுமன்றே, அது தான் குழவிமாட்டுயாதென ஆயும் வழி அது மேலைப்பிறவிப் பழக்கத்தான் வந்த அவாவெனவே பெறப்படுமென்பது. அற்றாயினுங் குடம் முதலாயின வடிவு நிறம் முதலிய பண்புகளோடு படைக்கப்படுதல்போல, உயிரும் அவா முதலிய பண்புகளோடு படைக்கப்படும் எனலே பொருத்தமாகலின் உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/236&oldid=1589469" இலிருந்து மீள்விக்கப்பட்டது