உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

229

பற்றிநிற்கும் என்பதனால் ‘நீற்றோன்' எனக் கூறினார். எனவே, எல்லாப் பொருள்களும் பருவடிவினவாய் நின்ற காலத்தும், அவ்வடிவு திரிந்து அவை நுண்ணியவாய காலத்தும் இறைவன் ஒருவனே அவையிற்றுக்குப் பற்றுக்கோடாவான் என்பதனை அவன் றிருமேனிமிசை யிலங்கும் திருநீறு அடையாளமாய் உணர்த்துகின்றது. இன்னும், நாற்காற் பசுவினது மலமாகிய சாணாகம், நெருப்பின் சேர்க்கையால் எரிக்கப்பட்டுத் தூயவாம் என்பதூஉம் அவ்வடையாளத்தால் அறிவுறுத்தப்படும் உண்மை யாம். அனலைச் சார்ந்த இரும்பு அவ்வனல் வடிவாய்ப் பொலிய, அவ்விரும்பினைப் பொதிந்த அழுக்கு அதனான் எரிக்கப்பட்டுத் தூவெண் சாம்பராய் அதன்மேல் நிற்றல்போல், இறைவனைச் சார்ந்த உயிரும் அவனுருவாய்த் திகழ அவ்வுயிரைப் பொதிந்த மும்மலங்களும் அவனாற் றூயவாய்ப் புறம்பே கழிந்து நிற்கும். இவ்வுண்மையை அறிகுறியாகவே சைவசமயத் துறவோர் அழல் நிறத்ததாகிய காவியாடையினையும், வெண்ணிறத்ததாகிய திருநீற்றினையும் தம்மேலணிகின்றார். இஃதிங்ஙனமாக, அழலுருவினனான முழுமுதற் கடவுளை வணங்காத ஏனைச் சமயங்களிலுள்ளாரும் சைவசமயத் துறவோரைப்போற் காவியாடை யுடுத்தல் அவர்தஞ் சமயவழக்குக்கு முரண ராய்ப் பொருளிலதாதலுங் கடைப்பிடித்துணர்க. இறைவன்றன்றிரு வுருவ மாட்சியினையும், அதனைத் தலைக்கூடினார்க்கு வரும் தூய பெரும்பேற்றினையும் நினைவுறுத்தல் பற்றியன்றே “திருநீறு பராமுகஞ் செயற்பாலதன்று” எனத் (தைத்திரீயோ பநிடதம் 1,11,1 தைத்திரீயோ பநிடதத் திருமொழியும் “எவராற் சிரோ விரதம் என்னுந் திருநீற்றுப் பூச்சு நூன் முறைப்படி கைக்கொள்ளப் படுகின்றதோ, அவர்க்கே இந்தப் பிரமவித்தை அறிவுறுக்கற் பாற்று” என* (முண்டகோபநிடதம் 3,2,10) முண்டகோபநிடதத் திருமொழியும் எழுந்தன வென்க.

இன்னிசை வீணையி லிசைந்தோன்' என்பது கட்டு நீங்கி டுபெற்ற உயிர்கள்பால் இறைவன் இன்பவுருவினனாய் விளங்கித் தோன்றும் முறைமையினை அறிவுறுத்துகின்றது. நரம்பு தெறிக்கும் முன்னெல்லாம் வீணையிற் புலப்படுதலில் லாத இனிய ஒலி அதனைத் தெறித்த அளவானே புலப்பட்டுத் தனது இனிமையினைக் காட்டல்போல, அருள்வழி நில்லாது மருள்வழி நின்ற காலத்தெல்லாம் உயிரிற் புலப்படாது நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/262&oldid=1589498" இலிருந்து மீள்விக்கப்பட்டது