உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

❖ - 25❖ மறைமலையம் - 25

அளவிற்கு ஏற்பவே நீரினைச் சொரிந்து பின்னர் இல்லையாம்; மற்றுக் கடல் முழுதுமே முகிலாய்த் திரிபுற்று நீரைச் சொரியப் புகுமாயின், அது தன் பேரளவிற்கேற்ப ஓவாது அதனைப் பொழியாநிற்கும். அதுபோல் எல்லை காணப்படாத பேரானந்தக் கடலே முகிலாய்ப் பொழியப்புகுமாயின் அஃது ஓவாது பொழியும் அருண் மழைக்கு ஓர் எல்லை காண்டல் இயலாதெனக் கூறியவாறாம்.

அப்பேரின்ப முகில் திருப்பெருந்துறைக்கட் குருவடிவிற் றோன்றித் தமக்கருள் பொழிந்தமை பற்றி அடிகள் அதனை வரையாக உருவகப்படுத்தித் ‘திருவார் பெருந்துறை வரை யிலேறி' என்றருளிச் செயதார்.

வான்முகில் மழைபெய்யுங்கால் மின்னொளி காலல் உலகின்கட் காணப்படுமாறுபோல அருண்மழை பொழியுங் கால் மின்போற் புலப்படுவது இதுவென்று அடிகள் கூறிற்றில ரானெனின்; அற்றன்று, கட்புலனாகாத அருளொளி தோன்றுங் கால் அதனோடியைந்து நிற்கும் விந்துவென்னும் மின்னொளி கட்புலனாயே விளங்கித் தோன்றுமாதலால் அதனைத் 'திருத்தகு மின்னொளி' என அடிகள் விளங்கக் கூறினாரென்றே கொள்க.

இனி, மின்னொளிகண்டு பாம்புகள் அழியுமாறுபோல, அருளொளிமின்னின் முன்னும் ஐம்புல அவாக்களாகிய அரவுகள் கெட்டொழியு மென்றார். மின்னும் இடியுந் தோன்ற அரவுகள் இறக்குமென்பது “அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு, அணங்குடை அரவின் அருந்தலை துமிய” என்னும் புறப்பாட்டினும் (புறநானூறு 211) மேகம் பாப்பினம் பதைப்ப மின்னி என்னுஞ் சிந்தாமணியினும் (சீவகசிந்தாமணி 3071) கண்டு காள்க.

'பந்தனை' பந்தநம் என்னும் வடசொற்றிரிபு. ஐம்புல அவாக்களும் உயிர்களைக்கட்டிப் பிறவிகட் செலுத்துதலின், அவை தம்மைப் ‘பந்தனை’ எனக் கூறினார். அழகிய தொற்றத் தினவாயினும் நஞ்சு உடையவாய்த் தம்மையணுகினாரைக் கொல்லும் நச்சரவுகள் போல, ஐம்புல அவாக்களும் இன்பந் தருவனபோற் றோன்றினும் துன்பமுடையவாய்த் தம்மை யுடையாரைப் பிறவிக்கட் செலுத்துதலின் இவை அவற்றோடு ஒப்பிக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/271&oldid=1589509" இலிருந்து மீள்விக்கப்பட்டது