உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

287

வருடுதலானும் முனிவரெல்லாந் தம் ஐம்புலன்களும் இன்புறப் பெறுதலின் நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர என்றருளிச் செய்தார்.

ஈண்டு நீண்டு வளர்ந்த திருமாலைப்பற்றிப் பேசுகின்ற மையின் அதற்கேற்ப நெடுமால் என்றும், அங்ஙனம் நீண்டோங் குந் திருமாலின் கதிர் முடியையே நோக்கிப் போற்றுதலின் முனிவரும் போற்றிசெய் கதிர்முடி என்றும் அருளிச் செய்தார்.

‘அடிமுடி’அடியினது முடிவு எனப் பொருள்படும். 'முடி' முதனிலை வினைப்பெயர். இங்ஙனம் பொருள்படுதலை யறியாதார் இச் சொற்றொடர்க்கு அடியும் முடியும் எனப் பொருள் கூறினார்; அடி முடியறிவும் ஆதரவு ஈண்டுத் திருமால் மேற்றாகவைத் துரைக்கப்படுதலானும், அத் திருமால் இறைவனது அடியைத் தேடப் புக்கனரே யல்லால் முடியையுங் காணப்புகுந்தன ரென்பது புராணத்தின்கட் பெறப்படாமை யானும், நான்முகன் முடிதேடப்போனமை ஈண்டு அடிகளாற் கூறப்படாமையானும் அவ்வாறு பொருளுரைத்தல் பொருந்தா தென்க. அற்றேல், நான்முகன் இறைவனது முடி தேடச்சென்று இளைத்தமை ஈண்டெடுத்துக் கூறாமை யென்னை யெனின்; தேவர்கள் எல்லாரினுஞ் சிறந்த திருமால் இறைவனது அடி தேடி யெய்த்தமை கூறவே, அவரினுந் தாழ்ந்த நான்முகன் முதல் வன்றன் முடித் தேடிக் காணாமை தானே பெறப்படுமாகலின் அதனை எடுத்துக் கூறாது உய்த்துணர வைத்தாரென்பது.

‘ஆதரவு’அவா எனப் பொருள்படும். ஆதர: என்னும் சொற்றிரிபு; ஆதரவதனில் என்பதில் அது பெயர்ப்பொருளை அசைத்துநின்ற அசைநிலை இடைச்சொல்.

கடுமுரண் - மிக்க வலி; கடும்பசி கலக்கிய என்புழிப் போல (புறநானூறு 230) ஈண்டுக் கடு மிகுதிப் பொருள்பட நின்றது; கடி என்னும் உரிச்சொற் கடு வெனத் திரிந்தது.

இனி, அனற்பிழம்பு வடிவாய்த் தோன்றிய இறைவன்றன் அடியை முதலிற் றேடப்புக்கவர் திருமாலென்பது மேலெடுத்துக் காட்டிய இலிங்கபுராணக் கதையின்கட் சொல்லப் பட்டிருத்தலின், அதற்கேற்ப அடிகளும் ஈண்டு முன் கலந்து என்றருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/320&oldid=1589587" இலிருந்து மீள்விக்கப்பட்டது