உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

307

னவாய்ப் பெருகி நிகழ்தலின் வை தம்மை ஆறுகோடி மாயாசத்திகள் என்றார். இவ்வுட்பகை ஆறும் ஆணவத்தின் வலியால் அதன் வழி நிற்கும் உயிரின்கட் டோன்றுவன வாயினும், அவை தோன்றுதற்குக் கருவியாய் அவ்வுயிரோ டுடன் நின்று உதவுவது மாயையே யாகலின் அவற்றை அதன்மே லேற்றி ‘மாயாசத்திகள்’ என்றருளிச் செய்தார்; ஈண்டு மாயை என்றது மாயையிற் றிரண்ட உடம்புங் கருவிகளும் உலகமும் நுகர் பொருள்களுமே யாம்.

‘சத்தி’ என்பது ஆற்றல் எனப் பொருள்படும் சக்தி என்னும் வடசொற் றிரிபு.

‘மாயை’ வஞ்சனை; பிங்கலந்தை.

கடவுள் நினைவு பிறத்தற்கு முன்னும் இம் மாயா சத்திகள் வருத்துதலைக் “கருங்குழற் செவ்வாய்" என்பது துவங்கித் “தொல்விடம் பிழைத்தும்” என்ப தீறாக அடிகள் வகுத்துக் கூறினாராகலின், அந்நினைவு பிறந்த பின்னும் அவை வந்து வருத்துமென்றல் யாங்ஙனமெனின், அவை அதற்கு முன்னும் பின்னும் உளவாதல் உண்மையே யென்றாலும், முதற்கண் அவற்றின் வலிமைக்குத் தப்பிக் கடவுள் நினைவு வரப் பெற்றார்க்கு அந்நினைவு தோன்றிய வளவானே அவை முன்னையினும் பன் மடங்கு மிகுதியாகக் கிளைந்தெழுந்து அந் நினைவைக் கலைத்தல் இயல்பாகலின் அதுபற்றி அங்ஙன முரைத்தாரென்க.

இனி, இம் மாயாசத்திகளே யன்றித், தம்மையொத்த மக்களுள்ளும் அறிவும் அன்பும் வாய்க்கப் பெற்றாருங்கூட அக்கடவுள் நினைவைக் கலைக்கத் தலைப்படுவாராதலின் அதனைக் கூறுவான் றொடங்கி, உண்மையே கூறும் நண்பர் களும் அவரல்லாத பிறரும் ஒருங்கு கூடிக்கொண்டு கடவுளே இல்லை எனப் பேசிப் பேசித் தமது நாவுந் தழும்பேறப் பெற்றமையினைத் தெரித்தார். உண்மை கூறுவார் சொற்களை மறுத்தல் வருத்தமாகலின் ஆத்தமானாரை முதல்வைத்தார்; அவரை யன்றித் தம்பாற் பகையும் நட்பும் இல்லாத நொது மலருங் கடவுளை எவர் கண்டார்! நன்கு முயன்று பெற்ற பொருள் கொண்டு தமக்கினியாரோடு உண்டுடுத்து இனிது வாழ்தலே கடவுள் வாழ்க்கை. இஃதொழிந்து கடவுள் கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/340&oldid=1589686" இலிருந்து மீள்விக்கப்பட்டது