உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

319

என்புழி (சீவகசிந்தாமணி 2360) உயர்திணை யஃறிணைப் பெயர்கள் ஒருங்கு விராய்த் தொக்கது என அஃறிணை யொருமை வினையான் முடிந்தாற் போலவும் ஈண்டுங் 'கொடிறும் பேதையுங் கொண்டது விடாது' என அஃறிணை யொருமைப் பெயரான் முடிந்தது. இன்னோரன்ன முடிபு களெல்லாம்,

"பலவயினானும் எண்ணுத்திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின செய்யும் உள்ளே

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திரத்தின் கண்ணே (சொல் 51) அடங்கு மென்.கொண்டது விடாமைக்கண் மெய்யன்பருங் கொடிறும் பேதையும் ஒன்றாதல் பற்றிப் பின்னிரண்டையும் உவமையாக்கினார்.

படி - வகை; "கல்லுரு, ஒன்றியடி யிது” என்புழியும் (பரிபாடல் 19) இச்சொல் இப்பொருட்டாதல் காண்க.

அறைதல் - அடித்தல்; திவாகரம்.

கொடிறும் பேதையுங் கொண்டது விடாதென்பது தாம் பிடித்தது சலியாமைக்கு உவமையாய் வந்தது; ஈண்டுப் பசு மரத்தாணி அறைந்தா லென்றது இடையறா அன்பில் நிலை பெறுதற்கு உவமையா வந்தது.

முதற்றோன்றும் அன்பு மெல்ல வெளிப்புலனாதலிற் ‘கசிவது’ என்வும், பின்னர் அது வரம்பின்றியே பெருகுதலிற் பெருகி எனவும், அங்ஙனம் மேன்மேற் பெருகுமதில் அகப்பட்ட உயிர் இன்பத்தாற் சாலக் களித்தலின் ‘மறுகி' எனவும், அளவின்றிப் பெருகின அவ் அன்பினைத் தாங்கமாட்டாது உள்ளம் வாடுதலின் ‘அகங் குழைந்து' எனவும், அதற் கேற்பப் புறத்தே உடம்பு நடுங்குதலின் 'அநுகுலமாய் மெய்விதிர்த்து' எனவும், பேரன்பு மீதூரப் பெற்றார் செயலெல்லாம் உலகத்தார் செயல்களுக்கு முற்றும் மாறாய்க் காணப்படுதலின் அவ்வியல் பினாரைக் காணும் உலகினர் அவரை இகழ்ந்து நகுதல் அறிவிப்பார் ‘சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப எனவும், அவ்வாறவர் தமது புல்லறிவுகொண்டு இகழ்ந்துரைக்கும் பழித்துரைகளுக்கு மெய்யன்பர் நாணாராகலின் ‘நாணது ஒழிந்து' எனவும், நாணாமையே யன்றி அப்பழித்துரைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/352&oldid=1589746" இலிருந்து மீள்விக்கப்பட்டது