உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

மறைமலையம் 25

அடைதல் - சார்தல்; “அடையாவாம் ஆயங் கொளின்” என்பதன் (திருக்குறள் 939) உரையில் இப்பொருட்டாதல் காண்க.

'இத்திதன்னின்கீழ் இருமூவர்க்கு’ அருளிய வரலாற்றினை மேலே கீர்த்தித் திருவகலிற் “பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும்” என்பதன் உரையில் எடுத்துக் காட்டினாம்.ஆண்டு, நம்பியார் திருவிளையாடல் ஆலமரத்தின் நீழற் கீழ் இறைவன் அருள்செய்தானென் றுரைப்ப, ஈண்டு அடிகள் இத்திமரம் என்றோதுதல் என்னையெனின்; நம்பியார் காலத்திற்கும் மிக முற்பட்ட அடிகள் அதனை இத்திமர மென்றே ஓதுதலின் அதுவே கொள்ளற்பாற்றென்க.

டு

அத்திக்கு அருளிய வரலாறு வருமாறு: முன்னொரு காலத்துத் தேவேந்திரன் நிலத்தினின்றும் வானுலகஞ் செல்ல, அவனை எதிரேற்றுத் தேவரும் முனிவரரும் ஒவ்வொரு கையுறை நல்கினார்.அவ்வமயத்தில், துருவாச முனிவரனும் ஒரு தாமரைப் பூவும் ஒரு துளவத்தாருங் கொடுப்ப, அவற்றை வாங்கிய தேவர் கோன் அவற்றை ஒரு பொருட்படுத்தாது இகழ்ந்து தானூர்ந்து சென்ற வெள்ளானை மேல் எறிய, அதுவும் அவற்றை இகழ்ந்து தன் அடிக்கீழ் இட்டு மிதித்தது. அதுகண்ட முனிவரன் அச்சமுஞ்சினமுங் கொண்டு அவ்விரண்டையும் எடுத்துத் தன் முடிமிசை அணிந்துகொண்டு இந்திரனை நோக்கி ‘நின் தலைமுடி பாண்டியன் வளையினாற் பிளக்கப்படுவதாக!’ என்றும், வெள்ளானையை நோக்கி ‘நீ நிலத்தின்கட் காடுக டோறுங் காட்டியானையாய் உழல்வாயாக!' என்றுஞ் சபித்தனன். அச்சாபவுரை கேட்ட ஏனை முனிவரரும் தேவரும் மிக வருந்தி அம்முனிவரனைப் பொறுக்குமாறு வேண்ட, அவனுஞ் சினந் தணிந்து ‘பாண்டிய மன்னனால் தலைமுடி பிளவுபடினும், மீண்டும் உயர்வு பெற்றுப் பண்டுபோல் வானுலகை அரசாள்வான்' எனவும், ‘வெள்ளானைக் காட்டி யானையாகி உழலுங்காற் கடம்பமா அடவிக்கண் எழுந்தருளி யிருக்கும் சிவலிங்கப் பெருமானைக் கண்டு வழிபட்டுப் பழைய நிலையைப் பெறும்' எனவும் சாபவிடுதி தந்தான். அங்ஙனமே பின்றை நாளில் இந்திரன் முடிப்பிளவுண்டும், அவனது வெள்ளானை கடப்பங்காட்டிற் பெருமானை வழிபட்டும் தம் பண்டை நிலைமை எய்தினரென நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/381&oldid=1589883" இலிருந்து மீள்விக்கப்பட்டது