உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் 25

முடியுமாதலானும் அது பொருந்தாது. அற்றன்று, நூலினது சிறப்புக் கூறவே அதனை ஆக்கியோன் பெருமை தானே விளங்குமாதலின், அதனை வேறு கூறுதல் வேண்டா வெனின்; ஒரு நூல் கேட்பான் புகுவோர் அதனை ஆக்கியோன் பெருமை உணர்ந்தன்றி அது கேட்டலிற் கருத்து ஊன்றாராகலானும், நக்கீரனார் இளம்பூரணர் முதலான தொல் உரையாசிரிய ரெல்லாம் முதற்கண் ஆக்கியோன் பெருமை கூறல் வேண்டு மென்றே உரைத்தாராகலானும் முதலில் ஆக்கியோன் பெருமை கூறுவேண்டுவது கடமையா மென்க. அற்றேல், ‘எல்லைமருவா நெறியளிக்கும் வாதவூரெங்கோன்' என்றன்றோ செய்யுள் தொடங்குற்பாலதாமெனின்; இச்செய்யுட்கு எழுவாயாவது திருவாசகம் ஆதலின் அதற்கு அடைமொழியாய் நிற்கும் அை ‘எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்' என்பதே உரையுள் முன்வைத்து உரைக்கப்படும். இது செய்யுளாகலின் எழுவாய் பின்னும் ‘ஆக்கியதே' என்னும் பயனிலை முன்னுமாக முறை பிறழ வைக்கப்பட்டன.

தேன் என்பது தூய மலரிற் றோன்றித் தீஞ்சுவையினதாய்த் தன்னை உண்டார்க்கு இன்பந்தந்து அவர்க்குள்ள நோயினையுந் தீர்க்கும் மருந்தாதல் போல, இத்திருவாசகமும் தூய வாதவூரடி களின் திருவாயிற் பிறந்து சொற்சுவை பொருட்சுவை நிரம்பித் தன்னை கற்பார்க்குப் பிறவிப் பிணியையும் அதற்கேதுவான அறியாமையையுந் தொலைத்துப் பேரின்பம் நல்குந் திறத்த தென்று உரைத்துக் கொள்க. உவமையும் பொருளும் இங்ஙனம் பொருந்துமாறு உரைக்க அறியாதார் நெகிழ்ச்சிப் பொருளாகிய தேன் தளையை நீக்குதலும் அல்லலை அறுத்தலுமாகிய வலிய பொருளின் றொழில்களைச் செய்யாநின்றது ஒரு வியப்பெனப் பொருள் கூறி, அவ்வியப்புப் பொருளை ‘ஆக்கியதே’ என்பதன் ஈற்றில் நின்ற ஏகாரம் உணர்த்தா நின்றதெனவும் உரைத்தார். “தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே, ஈற்றசை இவ்வைந் தேகாரம்மே”என்று ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதும் ஏகாரப் பொருள் ஐந்தனுள் வியப்புப் பொருள் என்பதொன்று பெறப் படாமையால் அது போலியுரையா மென்க. தேன் நெகிழ்ச்சிப் பொருளாயினும் அது நோய் நீக்குதற்கண் வன் பொருட் செயலினும் மிக்கதாயிருத்தலின் அது தெரித்தற் பொருட்டுத் ‘தளைநீக்கி’ ‘அறுத்து’ எனும் வினை கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/39&oldid=1589172" இலிருந்து மீள்விக்கப்பட்டது