உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

37

இழுக்காமாகலின் அவனையன்றி வேறு எவையும் இல்லை, அவன் ஒருவனே காணப்படும் உலகங்களாயும் உலகத்துப் பல பொருள்களாயும் பல் உயிர்களாயும் தோன்றுகின்றான்; அது தெரிப்பான் வேண்டியே அடிகள் கடவுளை 'ஏகன்' என்று கூறிய அளவில் நில்லாது ‘அநேகன்’ என்றும் உரைப்பாராயினர் எனச் சொல்லுவாரும் உளர். காணப்படும் பொருள்களும் உய்த்துணரப் படும் உயிர்களும் உரு அரு என்றும் அறிவு அறியாமை என்றுஞ் சொல்லப்படும் இரு திறத்துள் அடங்கித் தத்தமக்கேற்ற வரையறையுள்ள அளவுடையனவாய்க், காலங்கடோறுந் தத்தம் நிலைமாறி வரும் இயல்புடையவா யிருக்கின்றன.இப்பொருள்களின் இருப்பும் இவற்றின்கட் காணப்படும் நிகழ்ச்சியும் ஆராய்ந்தறியும் வகையானன்றே இவற்றின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் முதல்வனான ஒரு செய்வோனை இவை யுடையவென்று துணிகின்றோம்; இப்பொருள்களும் இவற்றின் அசைவுகளும் முதல்வனியல்பின் வேறாக இல்லையாயின் இறைவன் ஒருவன் உளன் என்று நாம் அறிவதெங்ஙனம் கூடும்? ஆராயும் உயிர்களாகிய நாமும் நமதாராய்ச்சிக்குக் கருவியான உலகங்களும் எல்லாம் கடவுளே யாயின், பின்னர்க் கடவுளொருவர்உண்டு என்று கூறுவார் யார்? அங்ஙனம் கூறுதற்குக் கருவியாவன யாவை? என்று பகுத்துக் காண வல்லார்க்கு அவ்வாறு உரைப்பது நகையாடுதற்கே யிடமா மென்பது புலனாம். அல்லதூஉம், அருவாயும் அறிவாயும் தன்னியல்பின் மாறாது எங்குமுள்ள முழுமுதற் கடவுள் உருவாயும் அறியாமை யுடையவாயும் மாறிமாறி வரும் இயல்பினவாயுங் காணப்படும் இவ்வுலகங்களையும் இவ்வுலகத் துப் பல பொருள்களாயும் பிறப்பு இறப்புகளிற் கிடந்துழலுஞ் சிற்றறிவுயிர்களாயும் திரிந்து வருமென்றல் யாங்ஙனம் பொருந்தும்? அதனால், ஏகான்ம வாதக் கோட்பாடு பற்றி யுரைக்கும் உரை ஒரு சிறிதும் ஏலாமை கண்டு கொள்க.

அங்ஙனமாயின், அருவாய் நிற்கும் முதல்வன் அன்பர்கள் பொருட்டுப் பல உருவுகள் எடுப்பனெனின், அதுவும் அவன் இயல்புக்கு மாறாய் முடியுமே எனின்; அவனெடுக்கும் உருவு பருப்பொருளாகிய மாயையின் வடிவு போல்வதன்று, அஃது அவன் நினைந்த அளவானே அவனது அறிவின்கட்டோன்றும் அறிவு வடிவமாகும். இது, “சத்திதன் வடிவே தென்னிற்றடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/70&oldid=1589223" இலிருந்து மீள்விக்கப்பட்டது