உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

39

வேகங் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - ஏழை யேனது மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட இறைவனடியே மேம்பட்டுச் சிறப்பதாக.

‘வேகம்’ என்பது விரைவுப் பொருளை யுணர்த்தும் ஒரு வடசொல்; அஃது இங்கு அவாய் நிலையால் மன வேகத்தை உணர்த்திற்று. இனி, வேகம் என்பதற்கு வெப்பம் என்று பொருள்கொண்டு 'பிறவிவெப்பம்' என்று உரைப்பாரும் உளர்.

தனையடுத்த அடியிலும் அப்பொருளே சொல்ல வேண்டுதலின் அது பொருந்தாது.

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்றன் - பிறவியாகிய மரத்தை வேரோடும் அறுக்கும் சிவபெருமானுடைய; பெய் கழல்கள் - செறிக்கப்பட்ட வீரகண்டையினையுடைய திருவடிகள்; வெல்க - சிறக்க.

பிறவியை மரமாக உருவகஞ்செய்தல் அடிகட்குக் கருத்தா தலை அடைக்கலப்பத்தில் “நின்றிருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே” என்றும், "பெரும்பெருமான் என் பிறவியை வேர் அறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான்” என்றும் போந்த சொற்றொடர்களால் அறிக.

பிஞ்ஞகம் என்பது தலைக்கோலம்; அது “பிஞ்ஞகந் தலைக்கோலம்” என்னுந் திவாகரத்தான் உணர்க; சிவ பெருமான் திருமுடியும் அம்முடிமேல் அழகிய வெண்பிறையும் குளிர்ந்த கங்கை நீரும் உடையராதல்பற்றிப் பிஞ்ஞகன் எனப்பட்டார்.

பெய்கழல் - செறிக்கப்பட்ட வீரகண்டை, அஃதாவது வெற்றி பெற்ற வீரர்க்குக் காலிற் பொருத்தப்படுகின்ற வெண் டையம்; ‘பெய்கழல்' என்பது வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாய் வீரகண்டையணிந்த திருவடிகளை உணர்த்திற்று. ‘பெய்தல்' செறித்தலையுணர்த்தல் “அளித்தலும் பெய்தலுஞ் செறித்தலாகும்" என்னும் பிங்கலந்தையால் அறியப்படும்.

தேவர்களுள் எவரானும் அழிக்கலாகாத முப்புரங்களை நகைத்து எரித்தமைப்பற்றிச் சிவபெருமான் ஒருவரே வெற்றியிற் சிறந்த வீரரெனவும், வீரர்கட்குத் தலைவர் எனவும் இருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/72&oldid=1589228" இலிருந்து மீள்விக்கப்பட்டது