உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் 25

வேதத்தின்கட் பலகாலும் எடுத்துப் புகழ்ந்துரைக்கப்படுகின்றார். அவரது திருவடிக்கண் அணியப்படும் வீரக்கழல் நாத தத்துவத்தின் அடையாளமாம்.

புறத்தார்க்குச் சேயோன்றன் - அன்பில்லார்க்கு எட்டாத வனான இறைவனுடைய, பூங்கழல்கள் வெல்க - பூப்போல் மெல்லிய அடிகள் சிறக்க, புறத்தார் -அன்பிற்கு வெளியே நிற்கும் வன்னெஞ்சர். அன்புருவாய் விளங்கும் இறைவன் அங்ஙனமே அன்புவடிவாய்த திகழும் அடியார்பாலன்றி, அன்பில்லாத ஏனையோர்பால் விளங்கித் தோன்றாமையின் இங்ஙனம் அருளிச் செய்தார்.

பூங்கழல் - பொலிவுபெற்ற கழல் என்று உரைப்பினுமாம். கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க - கை கூப்பி வணங்கும் அன்பர்கள் அகத்தே நினைந்து நினைந்து மகிழ்தற்கு ஏதுவான இறைவனுடைய திருவடிகள் சிறப்பனவாக.

உள்ளன்பு உடையார்க்குக் கைகுவிதலும் கண்ணீர் வார்தலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் இன்றியமையா

அடையாளங்களாய் வெளியே நிகழக்காண்டலினாலும், அவற்றுள்ளும் தம்மால் அன்பு செய்யப்பட்டார் தம்மின் மேலானவராயின் அவரைக் கண்டக்காற் கைகுவிதல் இயற்கையாய் முன்நிகழ்தலினாலும் ‘கரங்குவிதலைச்’ சிறந் தெடுத்துக் கூறினார். தம் பெருமானை அன்பால் நினைக்கும் அடியார்க்குத்தோன்றும் பெருகிய மகிழ்ச்சி புறத்தே சொல்லால் உரைக்கலாகாமையின் 'உண்மகிழும்' என்றார்.

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - தலை மேற் கைகூப்பும் அன்பரை உயரச் செய்யுட் சீரோனது திருவடி சிறக்க.

குவிதல்

கைகளின் றொழிலாதலால் அதனைத் தலைக்கேற்றுதல் பொருந்தாமையின் அதனை ஏற்றற்குரிய கை என்னும் ஒரு சொல் வருவித்துத் ‘தலைமேற் கைகூப்புவார்' என்று உரைக்கப்பட்டது; கைகுவித்தல்தான் நெஞ்சின் புறத்தே குவித்தலுந் தலை மேற் குவித்தலும் என இருவகை; அவற்றுள் நெஞ்சின்புறத்தே குவித்தல் மேலடியில் கூறினமையின் இவ்வடியிற் றலைமேற் குவித்தலை உய்த்துணர வைத்தாரென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/73&oldid=1589230" இலிருந்து மீள்விக்கப்பட்டது