உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

-

47

ராய் - மக்களாகியும், பேய் ஆய் - பேய்களாகியும், கணங்கள் ஆய் - பூதக் கூட்டங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அரக்க ராகியும், முனிவர் ஆய் தவத்தோர் ஆகியும், தேவர் ஆய் - வானவர் ஆகியும், செல்லாநின்ற படைக்கப்பட்டு வராநின்ற, இத்தாவர சங்கமத்துள் - அசையாப் பொருளும் அசையும் பொருளுமாகிய இவற்றுள், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் - எம்பெருமானே யான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இளைப் படைந்தேன் என்றவாறு.

ஈண்டுக் கூறப்பட்ட உயிர்களின் தோற்றவரிசை செய்யுளாகலின் முன்பின்னாகப் பிறழவைத்தாராயினும், உரையுள் அவை தோன்றும் முறையே வைத்து உரைக்கற்பாற்று. எல்லா உயிர்ப்பொருள்களும் தாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயராத நிலையியற் பொருள்களாகிய தாவரமும், தாம் இருந்த இடத்தை விட்டுப் பெயரும் இயங்கியற் பொருள்களாகிய சங்கமும் என இருகூற்றுள் அடங்கும். தாவரவகையுள் கல் புல் பூடு மரம் என்னும் நான்கும், சங்கம வகையில் புழு பாம்பு பறவை பல் விருகம் மனிதர் அசுரர் முனிவர் பேய் கணங்கள் தேவர் என்னும் பத்தும் அடங்குவனவாம். தாவர வகையுள் முதல் நின்ற கல் என்பது கற்பாறை அல்லது மலை. இந்நிலவுலகத்திற் புற்பூண்டுகளுந் தோன்றுதற்கு முன் எல்லா உயிர்களும் மலைகளின் அணுக்களிற் புலப்படாது கிடந்து பின் உடம்புகள் பெறுதற்கு ஏற்ற தகுதி வந்த காலத்தே அவற்றினின்றும் முதலிற் புற்களாயும் அதன்பிற் பூண்டுகளாயும் அதன்பின் மரங்களாயும் ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றுவவாயின. இவ்வாறு நிலையிற் பொருள்களாய்ப் பிறந்து அவற்றின்கண் இருந்து அறிவு சிறிது விளங்கிப் பின்னும் மேற்பட்ட அறிவு விளங்குதற்கு ஏற்ற தகுதிப்பாடு வந்தவளவானே அதற்குரிய உயிர்கள் இயங்கியற் பொருள்களில் ஈரறிவுயிர்களான புழுக்களாயும், மூவறிவுயிர் களான சிதல் எறும்புகளாயும், நாலறிவுயிர்களான நண்டு தும்பிகளாயும் ஐந்தறிவுயிர்களான புழுக்களாயும், பாம்பு பறவை பல் விருகங்களாயும், ஆறறிவுடைய மனிதர் அசுரர்களாயும், ஆறறிவின் மேற்பட்ட அறிவுடைய முனிவர் பேய் கணங்கள் தேவர்களாயும் பிறவி எடுக்கும் என்பது உணர்த்தினராயிற்று. உயிர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்பப் படிப்படியே அவ்வறிவு வளர்ச்சிக்கு இடந்தரும் உயர்ந்த உடம்புகளும் வராநிற்கு மென்பது இதனாற் பெறப்பட்டது.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/80&oldid=1589247" இலிருந்து மீள்விக்கப்பட்டது