உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

147

இதிலமைந்த ஐம்புலன்களும் அவ்விருளைப் போக்கி நமதறிவை விளங்கச் செய்தற்கு இன்றியமையாக் கருவிகளாக இறைவனால் நமக்கு வகுத்துக்கொடுக்கப் பட்டிருக்கின்றன? கட்பார்வை மங்கிய கண் கண்ணாடியின் உதவியால் தனது பார்வை விளங்கப் பெறுதல் போலவும், புகையிற் பொதிந்த நெருப்புக் காற்றினுதவியால் அப்புகை நீங்கிச் சுடர்ந்தெரிதல் போலவும், பாசி மூடிய நீர் செம்படவர் வலையால் அரிப்புண்ட பின் தெளிந்து விளங்குதல் போலவும். மழைமுகிலால் மறைவுண்ட மதியம் மழை பொழிந்தபின் நீலவானில் நிலவொளி விரித்துச் சாலத் துலங்குதல்போலவும், நம தறிவை மறைத்த இருளும் விலகவிலக அவ்வறிவுஞ் சொலற்கருந் துலக்கமுடையதாகி, ஐம்புல உதவி வேண்டாமலே அண்மையிலுஞ் சேய்மையிலும் முற்கால இக்காலப் பிற்காலங்களிலும் எவற்றையும் எவற்றின் நிகழ்ச்சி களையும் நேரே காணவல்லதாகிய அறிவுக் காட்சியை நாம் பெறுங்கால், அதற்கு முன் நாம் அறியாமையால் அடைந்த நோயுங் கவலையும் வறுமையும் அவற்றால் வரும் அளவிலாத்துன்பங்களும் நம்மைவிட் டொருங்கே நீங்கிப்போக, நாம் எல்லையற்ற அறிவும் இன்பமும் நிரம்பப் பெற்று, எல்லாம் வல்ல ஆண்டவனது அருட்பேரொளியில் அழிவின்றி நிலை யுதலுறுவோம்.

ஆகவே, அத்துணைச் சிறந்த அறிவுக் காட்சி நமக்கு இயற்கையே உண்டென்பதனையும், அவ்வறிவுக் காட்சியால் நம் மக்களிற் சிலர் பலர் ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய பல நிகழ்ச்சிகளை நேரே காண்டலையும், உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு நன்கு விளக்கி, அவ்வாற்றால் மக்கட் பிறவியினை அரிதிற் பெற்றாரெல்லாரும் ஓவாத தமது தவமுயற்சியால், அவ்வறிவுக் காட்சியினை இன்னும் வரம்பின்றிப் பெருகச் செய்து, அதனால் அறியாமையும், அறியாமையினை அடிப்படையாகக் கொண்டு வரும் அல்லல்களும் ஒழிந்து இம்மை மறுமைக்குரிய எல்லா நலன்களையும் எய்தல் வேண்டும் என்னும் நோக்கம் பற்றியே தொலைவிலுணர்தல் என்னும் இந்நூலை இயற்றலாயினேம்.

இந்நூலின்கண் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் மெய்ந் நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன மேனாட்டாசிரியர் ஆராய்ந்து உண்மையென உறுதி செய்தவைகளாகும். இத்தமிழ் நாட்டிலும் ஆங்காங்குத் தொலைவிலுணர்தலாகிய நிகழ்ச்சிகள் நாடோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/180&oldid=1590227" இலிருந்து மீள்விக்கப்பட்டது