உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் - 26

தாஞ் செய்யும் அச்செயல்களால் துன்பத்தையடைகின்றனரா? இன்பத்தை யடைகின்றனரா? ஒருவரது செயலால் அவர்க்குப் L பகையாம் நிலையிலோ உறவாம் நிலையிலோ நிற்பவர்கள், அவரைப் பகைத்தோ அல்லதவரோடு உறவாடியோ எங்ஙனம் ஒழுகுகின்றனர்? அவ்வெவ்வேறு ஒழுக்கத்தால் அவரும் ஏ னையோரும் எய்தும் முடிவுகள் யாவை? என்று இவ்வா றெல்லாம் நாம் அவரவர் இயற்கை செயற்கை வரலாற்று முடிபுகளை யறிந்து கொள்வதிற் பேராவல் வாய்ந்தவர்களா யிருக்கின்றோம். இங்ஙனம் உணரும் உணர்ச்சியில், நல்லவரா யினார் இன்புறக் கண்டால் நாமும் இன்புற்றும், அவர் துன்புறக்கண்டால் நாமுந் துன்புற்றும் ஒழுகும் இயல்பு நம்மெல்லா ரிடத்தும் அமைந்து நிற்கின்றது. இன்னுந், தீயராயினார் தமது தீய செயலால் துன்புறக் கண்டால் அஃது அவர்க்குத் தகும் என்னும் மனநிறைவும், அவர் அங்ஙனந் துன்புறாமற் செவ்விய வாழ்க்கையிற் களித்து இறுமாந்திருக்கக் கண்டால் ‘இத் தீயரும் இங்ஙனம் வாழ்தல் தகுமோ! இறைவனே நீ உளையோ!” என்னும் மனப்புழுக்கமும் அடைபவர்களா யிருக்கின்றனம்.

இவையேயன்றி, இங்ஙனம் பலதிறப்பட்டவராய் இருக்கும் மக்கள் தாந்தாம் பிறவியெடுக்குங்கால் எவ்வெக்குடும்பத்தில் எவ்வெவ்விடத்திற் போந்து எவ்வெவ்வாறு வளர்ந்து வந்தனர்? அங்ஙனம் வளர்ந்து வருங்கால் அவர் எவ்வெக்காலத்திற் செய்த செயல்கள் எவ்வெப்பயனைத் தமக்கும் பிறர்க்கும் விளைத்தன? அவர் பிள்ளைமைப்பருவந் தொட்டுக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நுகர்ந்துவந்த உலகியற் பொருள்கள் யாவை? அவை தம்மால் அவருடைய உணர்வும் பண்புஞ் செயலும் எவ்வெவ்வாறு உருவாகிப் புறத்தே புலனாயின? என்று உலக இயற்கைக்கும் மக்கள் மனவளர்ச்சிக்கும் உள்ள உறவும் பயனும் அறிவதிலும் நாமெல்லாம் மிக்க வேட்கை வாய்ந்தவர்களா யிருக்கின்றனமே. இவ்வாறெல்லாம் மக்களுள் ஒவ்வொருவரின் இயற்கைகளும் அவற்றின் புறநிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று சன்னல் பின்னலாகப் பிணைக்கப் பட்டிருத்தலுடன், இப்பிணைப்பு, இடத்திலுங் கால இயக்கத்திலும் பொருந்திக் கிடக்கும் உலகியற் பொருள்களோடும் மிக நெருக்கமாக விரவி நடைபெறுகின்றன வல்லவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/201&oldid=1590248" இலிருந்து மீள்விக்கப்பட்டது