உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

❖ ❖ மறைமலையம் - 27

என்னும் பொருளைத் தருவதாகும். இவ்விரக்கம் என்னும் உயர்ந்த இயல்பானது இது நல்லது இது தீயது என்று பகுத்துக் காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்து மட்டும் காணப்படுகின்றதே யல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐவகை உயிர்களிடத்துங் காணப்படுகின்றிலது, அவ் ஐவகை உயிர் களுள்ளும் மிகவும் கீழ்ப்படியில் உள்ள புல், மரஞ், செடி காடிகள் முதலான ஓர் அறிவு உயிர்கள் இருந்த இடத்தை விட்டு நகராதனவா யிருத்தலாலும், அவற்றின் செய்கை இன்னதென்று விளங்காமையால் அவற்றின் இயல்பும் இன்னதென்று புலப்படாமையாலும் அவற்றைப் பற்றி நம்மால் ஆராய்ந்து பார்த்தல் முடியாது. இவற்றைத் தவிரமற்ற நகர்ந்து செல்லும் உயிர்களெல்லாம் தம்முடைய பலவகைப்பட்ட செய்கைகளால் தமக்குள்ள பலவகைப்பட்ட தன்மைகளையும் நமக்கு நன்கு வெளிப்படக் காட்டுகின்றன.

இவைகள் பசியெடுத்த காலங்களிலெல்லாம் தம்மினுங் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும்இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்பைச் சிதைத்துத் தின்னுகின்றன! கோழி, குருவி, கொக்கு, நாரை முதலிய பறவைகள் தாம் பசியெடுத்த பொழுது பூச்சி, புழு, மீன், முதலான தம்மினுஞ் சிறிய உயிர்களை இரக்கமின்றிக் கொன்று தின்னுகின்றன! நரி, ஓநாய், புலி, கரடி, அரிமா முதலான விலங்கினங்களோ தமக்குப் பசி யுண்டானபோது மான், மரை, ஆடு, மாடு முதலான அமைதியுள்ள உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனைக் கிழித்துத் தின்பதோடு, மாந்தர்களையுங் கூடச் சிற்சில பொழுதுகளிற் கொலை புரிந்து அவர்கள் உடம்பை உணவாக உண்டு விடுகின்றன! இவ்வலிய பறவைகளும் விலங்குகளுமே யன்றி, மிக மெலிய உயிர்களான தவளை பல்லி, சிலந்தி, புலி முதலியனவும் தம்மினுஞ் சிறிய பூச்சி களைப் பிடித்து தின்னுகின்றன! ஆகவே, இரக்கவியல் யென்பது மக்கள் அல்லாத மற்றை உயிர்க்கூட்டங்களிற் பெரும்பாலும் இல்லையென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றதன்றோ?

இனி இவ்விரக்க மென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாம் கொடிய வன்னெஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/113&oldid=1591083" இலிருந்து மீள்விக்கப்பட்டது