உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ

அண்டபகி ரண்டமும் அடங்கஒரு நிறைவாகி ஆனந்த மான பரமே

என்றும்,

கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே

91

என்றும் அருளிச் செய்தனர்களாயின் கொல்லாவொழுக்க மாகிய தெய்வத் தன்மையின் மேன்மையையும், கொலை யொழுக்கமாகிய விலங்கின் றன்மையின் தாழ்மையையும் நாம் விரித்துச் சொல்லுதலும் வேண்டுமோ?

பாருங்கள், விலங்கின்றமையாகிய கொடுந் தன்மைகள் நம்மிடம் உண்டாகும்போது நாம் விலங்குகளாய் விடுதலோடு, நம்மைச் சேர்ந்தவர்களையும் விலங்குகளாக்கி விடுகின்றோம். நாம் மற்றவர்களிடம் சினங்கொண்டு உரத்துப்பேசினால், அவர்களும் நம்மேற் சினங்கொண்டு உரக்கப் பேசுகிறார்கள்; உடனே அதனை மாற்றி அன்புடன் அமைதியாகப் பேசுவோ மாயின் அவர்களும் உடனே தமது சினத்தை விட்டு அன்புடன் அமைதியாகப் பேசுகின்றார்கள்; இன்னும் தமக்குரியவர்களை இழந்து ஆற்றாமல் வாய்விட்டு அழுபவர்களைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோ மாயின் நமக்கும் ஆற்றாமையால் அழுகை வருகின்றதன்றோ? உடனே அவர் அவ்வழுகையை நிறுத்தி வேறொரு மகிழ்ச்சி யான தொன்றை நினைந்து சிரிப்பராயின் அவரை அப்போது கண்டு நமக்குஞ் சிரிப்பு வருகின்ற தன்றோ? இங்ஙனமே இரக்கமற்ற கொடிய காலைத்தொழிலையும், அதனால் வரும் புலால் உண்ணு தலையும் நாம் பழகி வருவோமாயின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி, கரடி, சிங்கம் முதலியவற்றின் றன்மையை நாம் அடைவதோடு நம்மைச் சேர்ந்தவர்களும் நம்மைப் பார்த்து அக்கொடிய இயல்பை அடையும்படி செய்து விடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/116&oldid=1591086" இலிருந்து மீள்விக்கப்பட்டது