உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

197

திருமுழுக்குச் செய்தலும், பூமாலை புனைதலுஞ் சாந்தம் அப்புதலும் பிறவுமாகிய அன்பின் செயல்களைச் செய்தல் இயலாது. என்னை? தொட்டால் அது சுடும், நீர் சொரிந்தால் அஃது அணைந்துபோம், மலர்மாலை யணிந்தால் அம்மலர் மாலை கரிந்துபோம், அனற் கொழுந்து பருப்பொருள் அல்லாமையால் அதற்குச் சாந்தங் குழைத்திடுதலும் இயலாது. மற்று, அன்பின் பெருக்கோ அதற்குரியார்பாற் புறத்தே அச்செயல்களைச் செய்தாலன்றிச் சிறிதும் அமைதி பெறாது. தம்மாற் பேரன்பு செய்யப்பட்டவர் சிறு மகாரே யாயினும் அன்றி இளைஞரேயாயினும், அல்லது ஆண்டில் முதிர்ந் தாரே யாயினும் அவரைத் தொடுதற்கும், முத்தம் இடுதற்கும் அல்லது அணைதற்கும், அவரை நீராடச் செய்தற்கும், அவர்க்குப் பூமாலை புனைந்து சாந்தம் பூசுதற்கும், இன்னும் இவை போன்ற பிறவெல்லாஞ் செய்தற்கும் அவர்பால் அன்பு மிகப் பெற்றார் வேட்கை மீதூர்ந்து நிற்றல் காண்டுமன்றே!

அங்ஙனம் அவர் போலவே, இறைவனைத் தீவடிவில் வைத்து வழிபடுவாரும் ஆண்ட வன்பாற் கரைகடந்த அன்பு மீதூரப் பெற்றக்கால், அவற்கடையாளமான தீப்பிழம்பிலும் அவ் அன்பின் செயல்களைச் செய்தற்குப் பெரிதுவிழைந்தும், அவற்றிற்கு அஃது இடந்தராமை கண்டு அதனையொப்ப தொரு கல்வடிவே அவற்றிற்கெல்லாம் நன்கு இடமாதல் உணர்ந்தும், அவ்வனற் பிழம்பு வடிவினை யொப்பதாகக் கல்லின்கண் நீண்டு குவிந்த வடி டிவினைச் சமைத்து, அதனையே சிவலிங்கமாக நிறுத்தி, அதற்குத் தம் அன்பின் அடையாளங்களாகச் செயற்பாலனவெல்லாஞ் செய்து, பண்டுதொட்டு வழிபாடு செய்து வருவாராயின ரென்று ணர்ந்து கொள்க.

மேலும், கல்லும் மண்ணுந் தீயைப் போலவே இயற்கை யுண்மைப் பொருள்களாய் இறைவனாற் படைக்கப் பட்டவைகளே யாகையாலும், வான், வளி, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பொருள்களிலும் அவ்வைம்பொருட் சேர்க்கை யாலாகிய எல்லா வுலகங்களிலும் எல்லா உடம்புகளிலும் பாலுள் நெய்போலப் பழத்திற் சாறு போல இறைவன் பிரிவற நிறைந்து நிற்றல் எல்லாச் சமயத் தார்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/222&oldid=1591192" இலிருந்து மீள்விக்கப்பட்டது