உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

❖ ❖ மறைமலையம் – 27

அஃதொக்கும்; அவ்வாறு தீயிலிருந்து நீருக்கும் நீரிலிருந்து கல்லுக்குஞ் சென்று சிவபிரான் விளங்க வேண்டுமென்று வேண்டுதல் எற்றுக்கு? கல்லுருவி லிருந்தே விளங்கி அருள் செய்க என்று அஃதொன்றைச் சுட்டியே வேண்டிக் கோடல் போதாதோ? என வினவிற்; கரைகடந்த பேரன்பாற் கண்ணப்பரைப் போல் நெஞ்சம் நெக்கு நெக்குருகி வேண்டுவார்க்கு, எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கும் ஆண்டவன் கல்லிலுஞ் செம்பிலுங் கட்டையிலும் மண்ணிலும் நேரே விளங்கித் தோன்றி அருள் செய்வனென்பது திண்ணமேயாம். ஆனால், அத்துணைப் பேரன்புவாயாத ஏனைப் பொதுமக்கள் எல்லார்க்கும் அவன் அங்ஙனம் எளிதிலே நினைந்த பருப்பொருள் வடிவுகளிற் புலனாய்த் தோன்றி அருள் புரிதல் செல்லாது. அவர் பொருட்டாகவே நுண்ணிய ஒளிப் பொருளான அனற் கொழுந்தின்கண் முனைத்து நிற்கும்முதல்வனை, அவ்வனலுக்கு அடுத்தபடி நுண்மையுடையதுஞ் சிறிதொளி வாய்ந்ததுமான நீரின்கட் புகுமாறு வேண்டி, அதன்பின் ஒளியில்லாத பருப்பொருட் கல்வடிவில் அந்நீரை உகுத்து, அவ்வாற்றால் அவன் அக்கல்வடிவில் முனைப்புற்று நின்று அருள் செய்யுமாறு வேண்டுதல் செய்கின்றாரென்க. இறைவன் இயற்கை யாகவே விளக்கம்இல்லாத கல் மண் செம்பு முதலான பருப்பொருள் வடிவுகளில் முனைத்து நிற்கின்றிலன் என்பதுபற்றியே பட்டினத்தடிகள்,

சொல்லினுஞ் சொல்லின் முடிவினும் வேதச் சுருதியினும் அல்லினும் மாசற்ற ஆகாயந் தன்னினும் ஆய்ந்துவிட்டோர் இல்லினும் அன்ப ரிடத்தினும் ஈசன் இருக்கும்இடங்

கல்லினுஞ் செம்பினு மோஇருப் பான்எங்கள் கண்ணுதலே

என்று அருளிச் செய்வாராயினர். அனற் பிழம்பில் இயல்பாக விளங்கித் தோன்றும் ஐயன், அங்ஙனம் விளங்காத ஏனைப் பருப்பொருள்களிலும் விளங்கி நின்று அருள்புரிதல் வேண்டு மென்று நெஞ்சங்குழைந்து வேண்டினால் மட்டுமே, ஆண்டு அவன் முனைத்து நின்று அருள்வன் என்பது பண்டைச் சான்றோர்க் கெல்லாம் ஒத்ததொரு கோட்பாடாகலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/225&oldid=1591195" இலிருந்து மீள்விக்கப்பட்டது