உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

21

வருவது துன்பமே யல்லாமல் வேறில்லை; பகுத்தறிவு இல்லாச் சிற்றுயிர்கள் முதற் பேரறிவுடைய மக்கள் ஈறான எல்லா வுயிர்களும் உடம்புகளிற் புகுந்து இந்நிலவுலகத்திற் பிறந்த வுடனே தம் அகத்துள்ள பசித்தீயினால் துன்புறுத்தப் படுதலை நம் கண்ணெதிரே காண்கின்றோம் அல்லேமோ? பின்னர் அப் பசித்தீயானது தாம் உட்கொள்ளும் உணவால் தணிந்தவுடனே மகிழ்ந்து இன்புறுதலையுங் காண்கின்றேம் அல்லேமோ? இதனால் உயிர்களுக்கு முதல் அனுபவமாய் நிற்பது துன்ப மென்றும், அது நீங்கு முகத்தாற் சிறிது நேரம் நிற்கும் பின் அனுபவமாய் வருவது இன்பம் என்றும் இனிது தெளியப் பெறுகின்றேம், பாருங்கள்! நங் கட்புலனுக்கு எட்டாமிகச் சிறிய புழுக்களுள்ளும் இத்துன்ப நீக்கமும் இன்பப் பேறும் எவ்வளவு முயற்சியோடும் எவ்வளவு சுறுசுறுப்போடும் இடையறாது நிகழ்ந்து வருகின்றன!

கூரிய ஓர் ஊசிநுனியிற் றங்கி ஒரு சிறு நீர்த்துகளைப் பெருக்கக் கண்ணாடியின் உதவிகொண்டு பார்க்குமிடத்து, அதில் அளவிறந்த புழுக்கள் பலவேறு வகையான வடிவுடை யன வாய் உலவுதலும், அவற்றுள் வலிவாலும் வடிவத்தாலும் பெரியனவாய் உள்ள புழுக்கள் அவற்றாற் சிறிய புழுக்களைப் பிடித்துத் தின்ன மிகவும் பரப்பரப்போடு உலவித் திரிதலும், அங்ஙனம் உலவும் அவற்றுள் ஒன்று ஒன்றை இரையாகப் பிடித்த அளவிலே மற்றொன்றும் அவ்விரையைப் பிடித்தற்கு வந்து அதனோடு சண்டை யிடுதலும், அச்சண்டையிலே வெற்றி பெற்ற புழு தன்னிரையைத் தின்று பசி நீங்கி இன்புற்று நிற்றலும் இங்ஙனமே பசி தீர்ந்து இன்புற்றபின் ஆணும் பெண்ணு மாயுள்ள அவை ஒன்றையொன்று மருவிக் களித்தலும் கண்டு, இங்ஙனங் கண்ணுக்கு எட்டா நிலை யிலுள்ள சிறு புழுக்கள் மாட்டுங் காணப்படும் துன்ப நீக்கமும் ன்ப ஆக்கமுமே அறிவினும் நாகரிகத்தினும் மேலவராகக் கருதப் படும் மக்களிடத்தும் அவரினுஞ் சிறந்த தேவர்களிடத்தும் அடுத்தடுத்து நிகழ்வதுங்கண்டு கருது கால் எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும் இன்பப் பேற்றையுமே அவாவி நிற்கின்றன என்பது புலப்பட வில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/46&oldid=1591016" இலிருந்து மீள்விக்கப்பட்டது