உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

29

என்றும் அருளிச் செய்தவாற்றாற் றெளியப்படும். உலகத்திற் சிறந்த ஏனை ஆத்திக சமயங்கள் அறிவுறுப்பது போலவே நமது சைவ சமயமும் இங்ஙனம் அறிவுறுத்திடுமாயின் இதிற் போந்த சிறப்பு என்னையென்று பலர்க்கும் ஐயம் நிகழாமற் போகாது. ஆகவே அதனையும் ஆராய்வோம்.

எல்லா வுயிர்களும் இன்பப் பேற்றினையே முடிந்த பதமாக வைத்து விரும்புதலாலும், இன்பவுருவாய் விளங்கு தலே கடவுளின் சொரூப இலக்கணமாகிய உண்மை நிலை யாக இருத்தலாலும், அக்கடவுளைக் குறித்துப் பேசுங்காலத்தும் அவரை அழைக்குங் காலத்தும் இன்பம் என்னும் பொருளை தரும் பெயர்களிட்டு வழங்குதலே எல்லாரும் செயற்பால தாகிய பெருங்கடமையாகும். அஃதேன் என்றால், ஒரு பெயரைச் சொல்லும்போது அப்பெயரினாற் குறிக்கப்படும் பொருள் நினைவுக்கு வருதலானும், அப்பொருள் நினைவுக்கு வரவே அந்நினைவின் வயப்பட்ட நம்முயிர் அவ்வண்ண மாகவே நிற்குமாதலானும் என்பது, ஆனந்தம், இன்பம், அன்பு, அருள் என்னுஞ் சொற்களை வழங்குங்கால்,அச் சொற்களாற் சுட்டப்படும் இன்பம் என்பது நம் நினைவில் எழ, நம் உயிர் அவ்வுணர்வின் பாற்பட்டுத் துன்பத்தைவிட்டு இன்பவுருவாயே விளங்கும். ஆகவே, கடவுளை இன்பப் பெயரிட்டு அழைத்தலே மாட்சி உடைத்தாம் என்பது இனிது புலப்படும்.

இனி உலகத்திற் சிறந்த ஆத்திகமதங்கள் கடவுளை எவ்வெப் பெயர்களால் வழங்கிவருகின்றன, வென்று ஆராயு மிடத்து, அவற்றுள் ஒருசில அவரை எல்லாம் வல்லவர் என்னும் பெயரினாலும், வேறு சில அவரை எங்கும் நிறைந்தவர் என்னும் பெயரினாலும், மற்றுஞ் சில அவரை எல்லாத் தலைமையுமுடையவர் என்னும் பெயரினாலும், ஏனைச் சில அவரை எல்லாங் கடந்தவர் என்னும் பெயரி னாலும்,

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/54&oldid=1591024" இலிருந்து மீள்விக்கப்பட்டது