உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

139

அறியான். ஓ தீக்கடவுளே, எல்லா வற்றிற்கும் மேலோனே, முதற் றோன்றினோனே, எல்லாம் வல்ல தலைவனே, அணுவென்பவர் கட்டளைகளால் ஏவப் பட்டவனே, தன்னிடத்து அன்பு செலுத்துமவர்களைத் தீக் கடவுள் தன்னோடொப்ப அரியணை மீதேற்றுகின்றான்." இவ்வழுத்துரையிற் சுட்டப்பட்ட அணு வென்னுங் கடவுளே அத்தீப்பிழம்பின்கண் முனைத்துத் தோன்றும், முழுமுதற் பொருளாகிய சிவபிரான் என்பதும் உய்த்துணரற்பாற்று. ஞாயிற்றினுக்குப் பகல் என்னுங் சொல்லும், மாந்தர் வாழும் இடத்திற்கு ஊர் த்திற்கு ஊர் என்னுஞ் சொல்லும், அணுவிற்கு அணுவாய் விளங்குங் கடவுட்கு அணு வென்னுங் சொல்லும் இன்னும் இவை போல்வன பிறவும் பாபிலோனியர் அசீரியர் சாலடியர்' என்னும் பண்டைக்கால நாகரிக மாந்தர்க்குள் வழங்கி வந்தமையை உய்த்து நோக்குங் கால், குமரிநாட்டின் கண் உறைந்த நம் பண்டைத் தமிழ் முது மக்களில் ஒரு சாரார் அந்நாடு கடல் கொள்ளப்பட்டஞான்று ஆண்டு நின்றும் போய்ப் பாபிலோனியா சாலடி முதலான நாடுகளில் குடியேறினார் என்பதூஉம் புலனாகா நிற்கும். அஃதல்லா மலும், சாலடியர் வணங்கிய மற்றொரு கடவுட் பெயரான முரு என்னுஞ் சொல்லும் தமிழ்க் கடவுளான முருகன் என்பதனோடு ஒற்றுமையுடைத்தாய்க் காணப் படுதலும் உற்றுணரற் பாலதாம். அல்லதூஉம், பகலவனை வழிபட்டு வந்த ஏதுவானே அந்நாடு பாபிலோனியா என்று பெயர் பெற லானதும் அது பண்டைத் தமிழர் உறைந்த நாடென் பதனைப் புலப்படுத்தும், அது நிற்க.

இனி, மேலே காட்டிய பாபிலோனியர் அசீரியர் சாலடியரைப் போலவே அவரோடு ஒரு காலத்தினராய் நாகரிகத்தில் முதிர்ந்த பினீசியரும்≤ பகலவனை ஒரு கால் அமைதியான வடிவத்தோடும், பின்னொருகாற் கொடிய தீக் கடவுள் வடிவத்தோடும் வைத்து வழிபாடாற்றி வந்தனர். அவனது திருவுருவ அடையாளங்களாக நேர் நீண்டு தலை குவிந்த கற்களை மலை முகடுகளின்மேல் நிறுத்தி அங்கு அவற்றை வணங்கி வந்தனர். நேர் நீண்டு தலைகுவிந்த வடிவுள்ள கற்களையே இவ்விந்திய நாட்டின்கட் சிவலிங்கம் என வழங்கி வருகின்றனர். சிவம் என்பது முழுமுதற் கடவுள்; இலிங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/164&oldid=1591495" இலிருந்து மீள்விக்கப்பட்டது