உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

145

பேணப்படுகின்றது. இங்ஙனம் இருவேறு வகைப்படுத்து ஓதப்பட்ட இரு தெய்வங்களும் உண்மையான் நோக்கும் வழி இரண்டாகாமல் ஒரே முதற் கடவுளின் அனுக்கிரகரூபம் எனும் அறக் கோலத்தினையும், நிக்கிரகரூபமெனும் மறக்கோலத் தினையும் புலங்கொளக் காட்டி ஒன்றேயாமென்பதூஉம் இனிது உணரக் கிடக்கும். இங்ஙனமே சைவசித்தாந்தத்துள்ளும் ஒரு முழுமுதற் கடவுளே மங்கலமான அனுக்கிரகரூபத்திற் சிவன் எனவும், பயங்கரமான நிக்கிரக ரூபத்தில் உருத்திரன் எனவும் இரு வேறுவகைப்படுத்து உரைக்கப்படுதல் தேவார திருவாசக மெய்கண்ட நூல்களினும் இருக்கு முதலான நான் மறை களினுங் காணப்படும். தீயூ தோனியர் பண்டை நாளில் வழி பட்ட ஓடன் தோர் என்னும் இரு கடவுளரும் நம்மனோர் வழிபடும் சிவன் உருத்திரன் என்னும் இரு தெய்வங்களோடு ஒப்புமையுடைத்தாதல் மேற் காட்டிய வரலாற்றால் நன்கு விளங்கும். மேலும், சிவபெருமான் உமையம்மையை ஒரு கூற்றில் உடையராதல் போல ஓடன் என்னுங் கடவுளும் ஒரு பெண் டெய்வத்தைத் தனது ஒருமருங்கில் வைத்திருக்கும் ஒப்புமையும் அறியற்பாற்று. இனி இத் தெய்வங்களை அவர்கள் காடுகளிலுந் தோப்புகளிலும் வைத்து வணங்கி வந்தனர். அவ்வாறு வழிபடுங்கால் முழுமுதுற் கடவுளின் குறியாக ஒரு பெரிய மரத்தூணைத் திறந்த வெளியிலே நிறுத்தி அதனெதிரிற் பலிபீடம் அமைத்துத் தீ வளர்த்து வழிபாடாற்றி வந்தன ரென்பதூஉம் அவர்தம் பழைய வரலாறுகளாற்,“ புலனாகா நிற்கின்றது. இங்ஙனமே நம்ம னோரும் திறந்த வெளியாகிய அம்பலத்தே இறைவனருட் குறியாய்த் தூண்வடிவான ஒரு தறியை நிறுத்தி அதனெதிரே ஒரு பலிபீடம் எழுப்பி வழிபட்டுப் போந்தாரென்பதற்கும், நம்மனோரும் காடுகளிலுந் தோப்பு களினும் இத்தகைய வாம் அம்பலங்களில் இறைவனைப் பண்டுதொட்டுத் தொழுது போந்தார் என்பதற்கும் திருமறைக்காடு திருவாலங்காடு தில்லைவனம் கடம்பவனம் திருவா னைக்கா என்னும் திருக்கோயிற் பெயர்களும் தில்லையம்பலம், வெள்ளியம்பலம் முதலான உறுசான்றா மென்க. தூண் வடிவு தறி வடிவு கற்குழவி வடிவு குவிந்த புற்றின் வடிவு முதலியன வெல்லாம் சிவலிங்க மேயாதலும் உணரற்பாற்று.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/170&oldid=1591501" இலிருந்து மீள்விக்கப்பட்டது