உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் - 28

வழிபாடாற்றிய மிகப் பெரிய அழகான பழங்கோயில்கள் இஞ்ஞான்றும் அந்நகரங்களிற் பழுதுபட்ட நிலைமையில் நிற்கின்றன. பொன்னால் அணிபெற ஒப்பனை செய்து எழில் கிளர ஐந்தடுக்குயரம் மேலேழுப்பிச் சாலப் பெரியனவாய் அமைக்கப்பட்ட அக்கோயில்களின் உருவ அமைப்பினைக் கண்டு அவற்றைப் போய்ப் பார்க்கும் ஆங்கில நன்மக்களும் பிறரும் பெரிதும் வியப்படை கின்றனர். ஆசியா ஐரோப்பாக் கண்டங்களில் உயிர் வாழ்ந்த பண்டைக்கால நாகரிக மாந்தர்களோடு தொடர்பில்லாமல், அமெரிக்காக் கண்டத் திற்றனியிருந்து, வாழ்க்கை செலுத்திய அப் பழைய நாள் மாந்தரின் வரலாறுகள் அவற்றைக் கற்பார்க்கு இறும்பூது பயவாமற் போகா. அங்ஙனம் எவரும் வியக்கத் தக்கவாறாய்த் தனித்திருந்த அவர்கள் முழுமுதற் கடவுளைப் பகலவன் திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்களில் நேர் முகமாய்க் கண்டு வழிபட்டுப் போந்தமையினை அறி வொருங்கி உணருங்கால் இறைவனை ஒளிவடிவில் விளங்கக் கண்டு தொழும் வழிபாடே உண்மை வழிபாடாமென்பது ஐயுறவின்றித் துணியப்படும். அப்பழைய நாள் மக்கள் அங்ஙனம் பல்லாயிர ஆண்டுகட்கு முன் அமைத்த அவ் வெழில்கெழு பழங் கோயில்களிற் பெரிய பலிபீடங்களும் கல்லினாற் சமைத்த திருவுருவங்களுங் காணப்படுகின்றன. அக்கோயில்களின் வடிவங்கள் தமிழ் நாட்டிலுள்ள சிவ பெருமான் திருக் கோயில்களின் அமைப்பைப் பெரிதும் ஒத்திருத்தல் சாலவும் வியக்கற் பாலதொன்றா மென்க.

தீ

இங்ஙனம் இதுகாறும் எடுத்துக் காட்டிய பண்டை நாள் நாகரிகமாந்தர் வரலாறுகளால், அறிவொளி வடிவான முழுமுதற் கடவுளை நேரே கண்டு வழிபடுதற்குச் சிறந்த வாயில் களாய் நிற்பன ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்கள் மூன்றுமேயாமென்பதூஉம் அவ் வொளியுடைப் பொருள்கள் மூன்றுங் கட்புலனாற் காணும் அவ்வளவுக்கே இடந்தருவதல்லது அன்பின் மேலிட்டாற் றொடுதற்குத் தழுவுதற்கும் முத்தமிடுதற்கும் பூச்சாந்தம் ஆடையணிகலன் முதலியவற்றால் ஒப்பித்துக் கண்டு களிப்புறுதற்கும் இடந் தாராமையால் அங்ஙனமெல்லாஞ் செய்து இன்புறுதற்கு ஏற்ற கல் பளிங்கு செம்பு முதலிய வற்றால் அவ்வொளி வடிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/173&oldid=1591504" இலிருந்து மீள்விக்கப்பட்டது