உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

167

கெல்லாம் அகத்தே அறிவின் கண் அமையும் உருவங்களே முதலாதல் திண்ணம். இவ்வாறு கூறுதல் கொண்டு, அகத்தே யுள்ள அறிவின் உருவங்களே புறத்தேயும் வடிவங்களாய்த் தோன்றுகின்றனவேயல்லாமல், இவற்றின் வேறாகப் புறப் பொருள்களும் அவற்றின் வடிவங்களும் தனியே உண்மையில் இல்லாதன வென்று மாயாவாதி மதம்பற்றிக் கொள்ளற்க. ஒருவன் எத்துணை தான் அறுசுவையுண்டியின் வகைகளும், அவற்றை நறுமணங் கமழச் சமைக்குமாறும், சமைத்திட்ட தனைத் தான் தீஞ்சுவையோடு உண்டு மகிழுமாறும் தெளிவாய் உள்ளத்தில் நினைந்து அவற்றின் உருவங்களை அமைத்துக் காள்ளினும் அவற்றால் அவன் பசித்துன்பம் தினைத் துணையும் அகலாது; அவன் நினைத்த படியாகவே புறத்தே யுள்ள காய்கறி அரிசி பருப்பு நெய் முதலியவற்றைத் தொகுத்து, அவற்றைத் தீஞ் சுவைப்பட ஆக்கியுண்டால் மட்டுமே பசித்துன்பம் நீங்கி இன்புறுவான். இது போலவே, அகத்தே நினைக்குமாறெல்லாம், புறத்தே அந் நினைவின்வேறாய்த் தனித்திருக்கும் பொருள்களைத் திரட்டித் துய்க்குமாறறிந்து செய்தாலன்றி, அப்பொருணுகர்ச்சியும் அதனால் வரும் இன்பமும் தாமே வரா. ஆதலால், நினைவின் உருவங்களே புறத்தே பொருள்களும் பொருள்வடிவங்களுமாமென்றல் மெய்வழக்காகாதென்றும் அகத்தே அறிவினுருவங்கள் உளவாமாறு போலவே புறத்தே பொருள் வடிவங்கள் தனித் துளவாமென்றுங் கடைப்பிடிக்க

இனி, அகத்தே நினைவின்கண் அமையும் உருவிற்கு ஏற்பவே புறத்தே அதனோடியைந்து நிற்கும் பொருட் கண்ணும் வடிவம் அமையும் என்பது பிறிதொருவாற் றானுங் காணப்படும். சினங் கொள்ளுதலையே என்றும் பழக்கமாய் உடைய ஒருவனது நினைவு சினத்தின் வழிப்பட்ட உருவமுடையதாக ஆக, அவனோடியைந்து நிற்கும் அவனது உடம்பும் முகமும் அந்நினைவுக்கேற்றதொரு கொடிய வடிவத்தினை யுடைய தாகும். மற்று எஞ்ஞான்றும் உளம் மகிழ்ந்திருத்தலையே ஒழுகலாறாயுடைய பிறனொருவனது நினைவு அம்மகிழ்ச்சி வழிப்பட்ட உருவத்தினை எய்த எய்த, அவனோடொன்றாய் நிற்கும் அவன்றன் உடம்பும் முகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/192&oldid=1591524" இலிருந்து மீள்விக்கப்பட்டது