உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

229

வடிவினையுந் திருக்கோயில்களையுஞ் சிவமே யெனக் கருதி வழிபடுதல் இன்றியமையாததா மெனவும் இனிது விளங்குந் தனிப்பெருமாட்சி வாய்ந்ததாகும்.

கடவுள் உயிர் மலம் மாயை வினை வீடுபேறு என்னும் ஆறன் இயல்புகளை அளவையியல் வழா ஆராய்ச்சி முறையில் வைத்து நன்கு விளக்குந் தனி முதல் நூல் சிவஞான போதத்தைத் தவிர வேறேதும் எங்கும் எந்த மொழியிலும் இல்லை. உலகத்துள்ள நூல்களிற் சில, கடவுளியல்புகளிற் சிலவற்றை மட்டுமே எடுத்தியம்பும்; அச் சிலவற்றுள்ளும் ஒன்று மற்றொன் றனோடு ஒவ்வாமல் இகலும்; அதனால் அந்நூலறிவுகொண்டு இறைவன்றன் உண்மையியல்புகளை யுள்ளவாறுணர்ந்து அவனை நினைத்தலும் வணங்கலும் இயலாதொழிகின்றன. வேறு சில நூல்கள் உயிரினியல்புகளை அளந்தறியப் புகுந்து அவற்றின் உண்மை காணமாட்டாமல் அங்ஙனமே ஒன்றனோ டொன்று மாறுபடுங் கொள்கைகளை விரித்து வெறியவாயின; அவை தம்மால் உயிரின் உண்மை யுணர்தலும் இயலா தொழிகின்றது.

வாழ்த்தலும்

னி, உயிர்கள் பிறவிகளெடுத் துழலுங் காரணத்தை வேறெந்தநூலுங் கண்டதில்லை; அதனால் ஆணவ மலத்தைப் பற்றிய ஆராய்ச்சி சிவஞானபோதத்திற் றவிர உலகத்தின் கணுள்ள நூல்கள் வேறெதன் கண்ணுங் காணப் படுகின்றிலது.

இனி, இவ்வுலகத்திற்கும், இதன்கணுள்ள பொருள்கள் உடம்புகட்கும் முதற்கருவியாய் நிற்கும் மாயையென்னும் முதற்பொருளின் றன்மையினை உள்ளவாறுணர்ந்துரைக்கும் நூலுஞ் சிவஞானபோதத்தைத் தவிர வேறெதனையும் யாண் டுங் கண்டிலேம். இம் மாயையின் வழியே உயிர்கள் மாட்டு நிகழும் இருவினை நிகழ்ச்சிகளை முன்பின் முரணுறாமல் ஆராய்ந்து தெற்றெனத் தெரிக்கும் நூலும் இதனையொழிய வேறெதனையுங் காணேம்.

இனி, இவையேயன்றி, உயிர்கள் எய்துதற்குரிய முடிந்த நிலையான வீடுபேற்றின் மெய்ம்மையினை விளங்கத் தேற்றும் விழுமிய நூலுஞ் சிவஞானபோதமே யல்லால் வேறேதும் எங்கும் எம்மொழியிலும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/254&oldid=1591589" இலிருந்து மீள்விக்கப்பட்டது