உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் - 28

தெளித்து ஒரு நூலாக இயற்றினாரெனக் கூறுஞ் சிவஞான போதப் பாயிர வுரைகாரர் கூற்றே பட்டது பட்டாங்கு கிளக்கும் பெற்றியின தாய்த் துலங்கா நிற்கின்றது. மெய்கண்டதேவர்க்கு அதனை அறிவுறுத்திப் போன முனிவர் பெயர் மெய்கண்ட தேவர்க்கே தெரியாமையாற் போலும் அவர் அதனைத் தமது நூலுள் யாண்டுங் குறிப்பிட்டிலர். மற்று, அருணந்தியார் உமாபதி சிவனார் முதலான பின்னாசிரியரோ தத்தம் ஆசிரியர் பெயரை நன்கறிந்தமையால், அவ்விருவருந் தாந்தாம் இயற்றிய நூல்களுள் தத்தம் ஆசிரியர் பெயரைக் கிளந்தெடுத்தோதினர். இன்னும், மெய்கண்ட தேவரோ தம்மாசிரியர் இன்னாரெனத் தாம் வகுத்த சிவஞான போத நூலுள் யாண்டும் எடுத்தோதா மையின், அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரங் கூறினாரும், மெய்கண்ட தேவர்க் கதனை யுணர்த்தி னார் இன்னாரெனக் கிளவாராய் வாளா “நந்தி முனி கணத் தளித்த உயர்சிவஞான போத முரைத்தோன்” என வாய்மையே கூறினார். பட்டாங்கு கிளந்த இம் மெய்யுரைக்கு மாறாக அருணந்தியார் சிவஞான போதப்பொருளை மெய்கண்ட தேவர்க் குணர்த்தினவர் சனற் குமாரர் எனக் கூறியது, தமிழாசிரியராகிய மெய்கண்ட தேவர் கூர்ந்துகண்ட மெய்ப்பொருளை வடமொழி யாளர்க்கு உரிமை யாக்குதற் பொருட்டுச் செய்த சூழ்ச்சிப் புனைவுரையேயாம்; அதனால், அருணந்தியாருரை கொள்ளற்பாற் றன்றென விடுக்க.

இனி, அருணந்தியார் தமக்கு முதல் நூலாகிய சிவஞான போதத்தையும், அதற்கு வழி நூலாகத் தாம் இயற்றிய சிவஞான சித்தியையுந், தம் மாணாக்கர் மறை ஞான சம்பந்தருக்கு அறிவுறுத்தருளினர். இம் மறை ஞான சம்பந்தரை, இவர் தம் மாணவரான உமாபதி சிவனார் தாம் இயற்றிய ‘வினா வெண்பா' என்னும் நூலில் ‘மருதச் சம்பந்தர்’, “கடந்தைச் சம்பந்தர்’ எனப் பலகால் ஓதுதலின், இவர் பிறந்து வளர்ந்த ஊர்கள் திருமருதூருந் திருக்கடந் தையும் என்பது புலனாம். மறைஞானசம்பந்தர் தவவொழுக்கத்திலேயே முழுதும் உறைத்து நின்றமையால், இவர் நூல் ஏதும் இயற்றிற்றிலர். ஆயினுந், தாம் உணர்ந்த சிவஞானபோதம் சிவஞானத்தியார் என்னும் நூல்களைத் தம் மாணவரான உமாபதி சிவனார்க்கு

அறிவுறுத்தருளினர்.

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/273&oldid=1591608" இலிருந்து மீள்விக்கப்பட்டது