உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

27

மூன்றும் சருவ வியாபகப் பொருளாதல்பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை யென்க.

இனி, வியாபக இலக்கணம் இவ்வாறாதலைச் சிறிதா யினும் பகுத்துணரமாட்டாத ஏகான்மவாதியருள் ஒரு சாரார் ஓரிடத்தில் இருபொருள் ஒன்றினொன்று வியாபகமாய் நிற்றல் பிரத்தியக்கத்திலில்லை யென்றும், சருவ வியாபகத்திற்கு ஒரு பொருளேயன்றிப் பின்னும் ஒரு பொருள் இருத்தல் சாலா தென்றும், ஆகவே பிரம்மம் ஒன்றே சருவவியாபகப் பொரு ளாய் உள்ளது. ஏனையவெல்லாம் இல்லாத வெறும் பொய்ப் பொருளாமென்றும் தமக்குத் தோன்றியவாறெல்லாம் சொல்லுவர். இவர் கூறும் இவ்வுரையின் வன்மையைச் சிறிது ஆராய்வாம்.

ஓரிடத்தில் இருபொருள் ஒன்றினொன்று வியாபகமாய் நிற்றலில்லை என்பது பெரும்பாலும் உருவமாய்க் காணப்படும் காரியப்பொருள்கட்கன்றி ஏனையவற்றிற்கும் அதனை ஏற்றிச்சொல்லுதல் சிறிதும் இயையாது. ஒரு குடம் இருந்த இடத்திற் பிறிதொரு குடமும் இராது. என்னை? குடம் காரிய உருவப்பொருளாகலின், காரிய உருவப்பொருளுள்ளும் கடினமாய் வல்லென்றிருக்குந் திடப் பொருள்களே ஒன்றின் மற்றொன்று வியாபிக்க மாட்டாவாம். அவை நெகிழ்ந்த திரவப்பொருள்களாயின் ஒன்றி னொன்று வியாபகமாய்க் கலந்துநிற்றல் பிரத்தியக்கத்திற் காணப்பட்டதேயாம். பாலும் நீரும் ஒன்றாய்க் கலந்து ஓரிடத்திலிருத்தலும், உப்பும் நீரும் ஒன்றாய்க் கலந்து ஓரிடத்திலிருத்தலும் பிரத்தியக்கமாய் அறியக் கிடப்பவும் இருபொருள் ஓரிடத்திற் கலந்து வியாபியா என்றது பொருளுண்மை அறியாது கூறிய வாறாம். மேலும் வியாபாகம் என்றன் மாத்திரையானே வியாபிக்கும் பொருளும், அதனான் வியாபிக்கப்படும் பொருளும் தாமே பெறப்படுமாகலின், அதற்கு இரு பொருளின் இருப்பு அவசியம் வேண்டற் பாலதேயாமென்க. இவ்வாறன்றி வியாபகத்திற்கு ஒருபொருளே இருத்தல் வேண்டுமெனக் கூறுவாருரை பொருட் பேறிலவா மென்க. எனவே, கடவுள், உயிர், மலம் என்னும் முப்பொருள் களும் வியாபக வியாப்பிய வியாத்தி இயைபுற்றுமருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/52&oldid=1591381" இலிருந்து மீள்விக்கப்பட்டது