உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

31

ஆன்மாவின்கட் பொருந்தி நிற்பது ஆணவமலம் ஒன்று மாத்திரமன்று; இறைவன் றிருவருட் சத்தியும் அதனோடு உடனிற்பதாம். ஆணவ மலத்தின் வயப்பட்டு மாயையினுதவி யாற் சிறிதே அறிவு விளங்கா நிற்கும் ஆருயிர்கள் பெரிதுந் துன்பமே உழத்தலால், அவை தமக்கு இடையிடையே இன்பமுந் தோற்றுவித்து அயர்வு தீர்த்தற் பொருட்டாக அவற்றோடு உடனிற்கும் திருவருட்சத்தி அவற்றின் வினை நிகழ்ச்சியிற் கலந்து நின்று ஒரோவழி இன்பமும் பயக்கு மாகலின் அக்கன்மங்கள் அங்ஙனம் ஆன்மாவுக்கு இன்பமுந் தருவவாயின. எனவே, ஆன்ம வினை மலத்தைச் சார்ந்து நிகழும் வழித் துன்பமும், திருவருட்சக்தியைச் சார்ந்து நிகழும் வரி இன்பமும் பயக்கும் நீரவாம் என்க.

அது கிடக்க; இனிக் கன்மத்துக்கீடாக உயிர்கள் உடம் பெடுக்கும் என்று நூல்களெல்லாம் கூறாநிற்க, உயிர்கள் மாட்டு உடம்பு பொருந்துங்கால் அக்கன்மந்தோன்றுமென்றது யாங்ஙனமெனின்; கன்மத்துக்கீடாக உயிர்கள் உடம்பு எடுக்கு மென உரைப்பின், உடம்பெடுத்த பின்னன்றிக் கன்மத்தை ஈட்டலா காமையின் உடம்பிற்குப் பின்னேதான் கன்ம விளைவாமெனக் கூறுவாரை மறுக்கலாகாமையின் அது பொருந்தாது. அற்றன்று, முதன்முதற் சிருட்டியாரம் பத்திலே அநாதியாயிருந்த கன்மத்துக் கீடாக முதலிலோர் உடம்பு வரப்பின் அவ்வுடம்பிலிருந்தே முகந்தவினைக் கீடாகப் பின் உடம்புகள் தொடர்பாய்வர இங்ஙனம் பிறவித் தோற்றங்கள் நடைபெறு மென்பதே கருத்தாகலின், கன்மத்தான் உடம்பு வருமென்றலே இயை வதாமெனின்; அற்றன்று, சிருட்டி யாரம்பத்திற்கு முன் ஆன்மாக்கள் முழுதும் ஆணவமலத்திற் கிடந்து தம் இச்சா ஞானக் கிரியைகள் ஒரு சிறிதும் விளங்கா மலிருந்துழி ஆண்டுக் கன்மமலமு முடனிருந்த தெனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடைத்தன்றாம். என்னை? ஆன்ம அறிவின் இயக்க மின்றிக் கன்மமுண்டாதல் ஏலாமையினென்க. அல்லதூஉம் முதலிற் கன்மத்தான் உடம்பும், பின்னர் உடம்பாற் கன்மமும் வருமென்றல் ஒன்றனையொன்று பற்றுதல் என்னுங் குற்றமாய் முடிந்திடுமாகலின், அவ்வாறு கூறுதலும் வழுவுடைத்தாம். பின்னை என்னையோ விடுக்குமா றெனின்;--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/56&oldid=1591385" இலிருந்து மீள்விக்கப்பட்டது