உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

47

மனம் என்னுஞ் சடக் கருவியாமென்பதூஉம் இனிது விளங்கா நிற்கும் என்க.

இனி மனம் என்னும் இவ்வகக்கருவி ஒருகாலத்தொரு பொருளையன்றி அறிய மாட்டாதாகலின் அஃது அணுரூப மேயாமென்று நியாயநூல் இயற்றிய கோதமனார் கூறினாரா கலின் அவரோடு முரணி அது மிகப் பெரிதாகிய மூளை யென்னும் உறுப்பின் சாரமாமெனக் கிளத்தல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அணுவடிவான மிகச் சிறிய பொருளை யன்றி வேறு பெரும்பொருளை ஒரு காலத்துணர வல்லதன் றாயின், மனத்தை அங்ஙனம் அணுவுருவிற்றென்று வைத்துரைத் தல் இழுக்காது; மற்று ஒரு காலத்து ஓரிடத்தே வான் முதலான அகன்ற பெரும் பொருள்களையும் அது காணவல்லதாய் நடைபெறக் காண்டலால் அதனை அணுவெனக் கூறுதல் யாண்டையதோவென்க. அற்றன்று, புல் நுனிமேற் றங்கும் பனித்துகளிலே பெரிய பனைவடிவுங் காணப்படுதல் போல, அணு வடிவான மனத்தின்கண் அகன்ற பெரிய பொருள்கள் எல்லாங் காணப்படுதல் வாய்வதேயாமெனின்; அப்புல்லின் நுண்டுளி அப்பனை வடிவு தோன்றுதற்கு ஏற்ற பரிமாணம் உடையதாயிருப் பினல்லது அப் பனைவடிவும் அதன் கட்டோன் றுதல் செல்லாது; ஒளியுடைப் பொருள் தான் சிறிதாயிருப்பினுந் தன்னினும் பல மடங்கு பரிய பருப்பொருள் வடிவைக் காட்டும் ஆற்றலுடையதாந் தன்மைக்கு எற்ப, அப் புல்லின் நுண்டுளி தன்னினும் பெரிய பனைவடிவைத் தன்கட் காட்டுவதாயிற்று; மற்று அப்பனையினும்பெரிதான மலை வடிவைக் காணல் வேண்டுமாயின், அப்புல்லின் நுண்டுளி அதற்கு இடந்தரா மையின் அதனினும் பன்முறை பெரிதான கண்ணாடியின் கண் அதனைக் காண வேண்டுமன்றே. அதுபோலப் புறத்தே அகன்று பெரியவாய்க் காணப்படும் உலகியற் பொருள்கள் அனைத்தையுங் காணும் ஆற்றல் வாய்ந்த மனம் என்னுங் கருவி அவற்றைக் காண்டற்கியைந்த பரிமாணம் உடையதாகல் இன்றியமையாமையின், அது மிக நுணுகிய அணுவுருவிற் றென்றல் ஒரு சிறிதும் பொருத்த மின்றாம். பனைவடிவைத் தன்கண் விளங்கக் காட்டும் புல்லின் நுண்டுளி கோதமனார் கூறும் அணுவினும் பன்மடங்கு பெரிதாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/72&oldid=1591401" இலிருந்து மீள்விக்கப்பட்டது