உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் - 28

மென்றல், கண்ணுங் காதும் இயங்கா அப்பருவத்தே அவற்றோ டினப்பட்ட வாய்மாத்திரம் பேசுமென்பதனை யொத்துப் பொருந்தாதாய் முடியுமாகலின் அது வழுவாமென மறுக்க. அற்றேலஃதாக, குணதத்துவத்தினின்று புத்தியும் அதனிலிருந்து அகங்காரமுந் தோன்றுமெனக் கூறினமையின், பகுத்தறிவும், நானெனு முணர்வும் தோன்றுதற்கு முற்றொட்டே குண தத்துவம் இயங்குமென்பதூஉம், அஃது இயங்கவே அதன் ஒரு கூறான இராசதம் சுருசுருப்பினை உயிரினிடத்தெழுப்பு மென்பதூ உம் பெறற்பாலனவாமாகலின் அவை இரண்ட னோடுங் கூடியே குணதத்துவம் இயங்குமென்றல் வேண்டா கூறலாமெனின்; நன்று சொன்னாய்; குணத்திலிருந்து புத்தியும், புத்தியிலிருந்து அகங்காரமுந் தோன்றுமென்றதும், அவை ஒடுங்குங்காலும் அம் முறையே ஒடுங்குமென்றதும் அவற்றின் தோற்ற வொடுக்க முறையைத் தெரித்ததேயன்றி. அத்தத்துவங்க ளெல்லாம் முற்றும் அமைந்த இவ்வுடம்பகத்தே அவற்றுள் ஒன்று சிலகாலம் முன்னியங்கும் ஒன்று சில காலம் பின்னியங்கு மெனக் கூறிய தின்று; அவையியங்குங்கால் ஒன்றனையொன்று பற்றிக் கொண்டு எல்லாம் ஒருவரிசைப்படப் படிப்படி இயங்குதலே அனுபவத்திற்றெளியக்கிடந்த வுண்மையாம். ஒரு வரிசையாப் படிப்படியே இயங்குமென் றுரைப்பினும் ஒன்று முன்னும் ஒன்று பின்னும் இயங்குமென்பதே பெறப்படுமா லெனின்; அறியாது கூறினாய், ஒருவரிசை யென்றது உயிரினறிவு ஒரு தத்துவத்தைப் பற்றியக்கால் அதன் கண்ணே நெடுங்காலம் நில்லாது மிக்கு விரைந்து ஏனை எல்லாத் தத்துவங்களையும் இயக்குதலையாகலின், இங்ஙனம் ஒன்றனை ஒன்று அவாவாது முன்னர் நெடுங்காலம் ஒன்றிலும் பின்னர் நெடுங்காலம் ஒன்றிலும் நின்றியங்குவதுபோல் வைத்து ஆண்டு முற்பிற்பாடு கற்பித்தல் ஒருசிறிதும் பொருந்தாதென்றோர்க. இசை வல்லான் ஒருவன் இனிது பாடுதலை ஒருவன் கேட்கச் சென்றவழி ஆண்டு அவன்மாட்டுக் கேட்குஞ் செவியுணர்வும், அதனைப்பற்றி நிற்கும் மனமும், அவ்விசை வேறுபாடுகளைத் துணிந்தின்னதிது வெனும் புத்தியும், அதனை முனைத்துக் கேட்கும் அகங்காரமும், அது தன்னைக் கேட்டதாற் பிறக்குஞ் சத்துவகுணமும் ஒருவரிசைப் பட நிகழல் காண்க. அற்றேல், இவ்வுதாரணத்தின் கண் ஐந்து தத்துவங்கள் மாத்திரையே ஒன்றனையொன்று பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/95&oldid=1591424" இலிருந்து மீள்விக்கப்பட்டது