உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

43

அவற்றை நடைபெறுவித்து வந்தனராயினும், அவ்வேள்வி வேட்டல் சிறிதும் பயன்படாமை அறிவித்து அவர்க்குத் தத்துவ நுண்பொருள்களையுந் தமிழர் ஆங்காங்கு உணர்த்து வாராயினர்.புதியராய் வந்தோர் தாம் வழக்கமாக மேற்கொண்டு செய்யும் ஒரு கருமத்தைச் சடுதியிற் செய்யவேண்டாமென்று நிறுத்தினால் அவர்மிக மனம் வருந்துவராகலின், அவர்க்கு முதலில் உதவியாளராய் நின்று அவர் வேண்டிய வேள்விக் கன்மங்களையும் நடாத்திவந்த தமிழர் பின் சிறிது சிறிதே அவர்க்குத் தத்துவ நுண்பொருளறிவு கொளுத்தி வேள்வி வேட்டல் பயன்படாமையே யன்றித் தீவினையுடைத் தாதலுங் காட்டுவர். இங்ஙனந் தமிழாசிரியர் காட்டிய அறிவுமொழிகளே உபநிடதங்களென்று பிற்றைஞான்று பெயர் பெறலாயின. உபநிடதங்களெல்லாம் ஒரு முகமாய் நின்று வேள்விவேட்ட லாகாதென்றும், மக்களெல்லாருந் தத்துவஞானந் தலைப்படுதல் வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றன. வேதங்களிற் சொல்லிய கன்மங்களுக்கு முற்றும் மாறுபாடாய் நின்று அவை தம்மைப் பழித்துத் தத்துவ ஞான மேம்பாடு புலப்படுக்கும் பெற்றியனவாம். அவை வேதாந்தமெனவும் பெயர்பெறுகின்றன. வேதமும் வேதாந்தமும் தம்மிற் பெரிதும் முரணி நிற்பனவாம். வேதம் கன்மங்களை மிக்கெடுத்துக் கூறுவன; வேதாந்தம் அவற்றைப் பழித்து ஞானத்தை மிக்கெடுத்துக் கூறுவன; வேதம் ஆரிய மக்களாற் செய்யப்பட்டன; வேதாந்தம் தமிழ்மக்களாற் செய்யப்பட்டனவாம். வேதமட்டும் அறிந்த ஆரியர் வேதாந்தமறிந்த தமிழர்பால் அதனைக் கற்றறிவா ராயினர். பண்டைக் காலத் தமிழர்க்குட் புகழ்பெற்ற வேந்தரா யிருந்த சனகன் சைவலி, அசாதசத்துரு முதலிய மன்னர் மன்னர் ஆரியர்க்கு வேதாந்தம் உணர்த்திய வரலாறு சதபாதபிராமணம், உபநிடதம் முதலிய நூல்களாற் றெற்றென விளக்கப்படுகின்றது. தமிழமன்னரும் அம்மன்னர் குடியாரும் ஆரியரால் அரசினியார் என்றழைக்கப்பட்டவாறு முன் இனிது விளக்கிப் போந்தாம். அப்பெற்றியராம் ‘ராஜந்யர் ஆரியர்க்குத் தத்துவஞானம் புலங்கொள அறிவுறுத்து வந்தமைக்கு ஈண்டு இரண்டோர் உதாரணங் காட்டுதும்:

சதபாதபிராமணம் 11 ஆம் புத்தகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/68&oldid=1591732" இலிருந்து மீள்விக்கப்பட்டது