உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
306

❖ மறைமலையம் - 3 ❖

போட்டு, அதன் மேல் மறுபடியுங் கையை வைக்க வேண்டும்; மற்றக்கையைத் தலைமேல் வைத்து அக்கம்பளியின் மேன் முனையைப் பிடித்துக்கொண்டு, அதன் ஊடே காதுக்குள் வலுவாய் ஊதுக.அந்நோய் உடனே நீங்க வேண்டுமென்னும் முனைப்போடு இவ்வாறு மூன்று, நான்கு முறை செய்க. வெதுவெதுப்பான ஓர் உணர்ச்சி வலியுள்ள பல்லின்கண் உண்டாக, உடனே அவ்வலி தணியும். கடைசியாக ஊதியபின், காதின்மேலிட்ட கம்பளியை அகற்றிவிடுக. இம்முறையால் இந்நோயை உடனே போக்கலாமேனும், இதனை வேரோடு களைதல் இஃதொன்றால் மட்டும் முடியாது. மலக்குடரில் அழுக்குச் சேராமல் நாடோறுங் கழுவிவிடுதலாலும், காலைமாலை இரண்டுவேளை நீரை நன்றாய்க் கொதிக்க வைத்துப், பல்வலியுள்ள பக்கத்தின் உள்ளும் புறம்பும் அவ் ஆவியிற் படும்படி செய்து செவ்வையாய் அதனை வியர்க்க வைத்தலாலும் அந்நோயை அடியோடு தொலைக்கலாம்.

இனிக் கொடுமையான தலைவலி கொண்டவர்களுக்கும் அதனை உடனே நீங்கச் செய்யலாம். நோயாளிக்குப் பின்னே நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் நோயாளியின் நெற்றி மேற் சிறிதுநேரம் வைத்து, அங்கிருந்து கன்னப்பொட்டுகளைச் சிறிது அழுத்தியபடியாய் மெல்லப் பின்னுக்குத் தடவிப், பிறகு கைகளை உச்சந்தலைக்குக் கொண்டுபோய், அங்கிருந்து அவற்றை எடுத்து உதறுக. திரும்பவும் இங்ஙனமே செய்க. இப்படியாக ஐந்துமுதற் பதினைந்து நிமிடங்கள் செய்தால், தலைவலியின் காடுமை தணியும். பின்னும் அது சிறிதிருந்தால், வலிநீக்குந் தைலம் இட்டுச் சிறிது தேய்த்தால் அது முற்றும் நீங்கும். மறுபடியுந் தலைநோய் வராதபடி மலக்குடரைத் துப்புரவு செய்து, தீனிப்பை செவ்வையாகும் பொருட்டுச் சூடான நல்ல வெந்நீர் அருந்துக.

இனிப் பொருத்துப் பிடிப்பு முதலான நோயால் மிக வருந்துவோர்க்கும் இம்முறையில் அத்துன்பம் எளிதில் நீங்கும். நோய் கொண்ட பொருத்தின்மேற், கடைவிரலை அகற்றி மற்றை விரல்களைச் சேர்த்து நேரொக்கப்பிடித்து, அங்கிருந்து கீழ்நோக்கித் தடவிக் கீழே அவ்வுறுப்பின் முனைக்கு வந்ததும் இரண்டு கைகளையும் உதறிவிட்டுக் கைகளைப் பக்கச்சாய்வாய் மேலுயர்த்தி, மறுபடியும் அங்கிருந்து அவ்வாறே தடவி உதறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/339&oldid=1626204" இலிருந்து மீள்விக்கப்பட்டது