உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48

❖ மறைமலையம் - 3 ❖

சிந்தனையோடு திருத்தமாகச் சொல்லற் பாலனவாயிருக்கின்றன. இத்தகைய கேள்விகளுக்குச் சுருக்கமான விடையளிப்பது கூடாத காரியம்; ஒழுங்கின்றித் தைக்கத் தக்கவிதமாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் மேல் என் கருத்துக்களை உருவாக்கிச் சொல்லுவது கூடாத காரியம். இரண்டு பக்கத்தைப்பற்றியும் சொல்லவேண்டுவன மிகுதியாயிருத்தலால், யான் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்வது மிகவும் பிரயாசையான கருமம். எனக்கு வெறுப்பாயுள்ள இவ்வுலக விவகாரங்களில் யான் கூடி நிற்கும் இச் சில நிமிஷங்களுக்கு மாறாக, இவை எல்லாக் கேள்விகளையும் சிக்கறுத்துச் சொல்வதற்கு எத்தனையோ நாட்களும் எத்தனையோ மணி நேரங்களும் வேண்டும். என் நண்பரே! நீர் இதனை உண்மையாகவே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”

ஸ்டெட் : “உண்மைதான்; ஆனால் நீங்கள் இவ்வுலகத் திருந்த ஞான்று அஞ்சல் அட்டைகளிற் சுருக்கி எழுதிய நற்புத்தி போதங்களால் எம்மை ஊக்கமுறுத்தி நடத்தி வந்ததுபோல, இப்போதும் தாங்கள் அவ்வஞ்சல் அட்டையின் சாரம் போன்ற தங்கள் கருத்துக்களைச் சுருக்கமாக உருவாக்கிக் கூறலாமன்றோ?”

கிளாட்ஸ்டன் : “ஆவேசக்காரரான இக் கனவானுடைய மூளையின் சக்தியானது சிறிதாக இருத்தலால் அதன் வாயிலாக இவ்வேலையை நிறைவேற்றுவிப்பது மிகவுங் கஷ்டமாயிருக்கின்றது. என்னுடைய நினைவுகள் வெளிப்படுதற்குக் கருவியாயிருக்கும் இக் கனவானிடத்து எனக்குள்ள எல்லா நன்குமதிப்போடும் யான் சொல்வது யாதெனில், யான் விரும்பியவண்ணம் எதனையும் விரித்து விளக்கிச் சொல்வது சிறிதுங் கூடாத காரியமாயிருக்கின்றது.”

ஸ்டெட் : “பிரபுக்களுக்குங் குடிமக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் மகாஜனங்களுக்கும் இடையில் உண்டாகும் சச்சரவிலுங் குழப்பத்திலும் தாங்கள் திரும்ப ஒருமுறை வந்து சம்பந்தப்படும்பொழுது தங்களுள்ளத்திற் போர்த் தழும்பேறிய இயற்கை உணர்ச்சியானது கிளர்ச்சி பெற்றுத் தோன்றவில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/81&oldid=1628593" இலிருந்து மீள்விக்கப்பட்டது