உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
49



பிரபுக்களுடன் சண்டை

கிளாட்ஸ்டன் : “என் அன்புள்ள நண்பரே! ஆம், அஃது அப்படித்தான்; ஆனாலும், அதைத்தான் யான் விலக்க முயல்கின்றேன் என்பதை நீர் அறிய விரும்புகின்றேன். இத் தன்மையான கலவரங்களினின்றும் என்னை விடுவித்து, யான் விரும்பும் வழியே செல்லவிழைகின்றேன்.

ஸ்டெட்: “அப்படியானால், இனிமேற் றாங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையா? உரிமைப் பொருளாய் நீங்கள் எங்களுக்கு விட்டுப்போன பிரபுக்களுக்கும் எங்களுக்குமுள்ள சச்சரவைப்பற்றி நீங்கள் இனிக் கவலைப்படுவதில்லையா? அச் சச்சரவு இப்போது தான் மும்முரமாய் வருகின்றது. எல்லாப் பொறுப்புக்கும் எல்லாத் துன்பத்திற்கும் உள்ளாயிருக்கின்றவர்களுக்கு மனக்கிளர்ச்சி உண்டாகும்படி நீங்கள் சொல்லத்தக்கது ஒன்றும் இல்லையா?”

கிளாட்ஸ்டன் : “அதில் எனக்குக் கவலையிருக்கிறது. சண்டையை உண்டாக்க எனக்கு முன்னேயிருந்த விருப்பமும், இது சம்பந்தமாக இவ்விஷயத்தில் முன்னே யான் சொல்லினவும் எல்லாம் மேல்மண்டபச் சபையார் ஆட்சியுரிமை பெறலாகா தென்பனவேயாகும்.”

ஸ்டெட் : “ஆம், ஐயா கிளாட்ஸ்டன் துரையவர்களே! யாங்கள் செய்துவரும் சண்டையில் யாங்களே வெற்றிபெறும் வண்ணம் எங்களை ஆசீர்வதிப்பதற்கும் உங்கட்கு மனம் வரவில்லையே! இம் மண்ணுலகில் நடைபெறுங் காரியங்களில் தங்களைவிடக் கார்டினல் மான்னிங் துரையவர்களுக்கு மிகுந்த இரக்கம் இருக்கிறதன்றோ?"

கிளாட்ஸ்டன் : “உம்முடைய நிலைமையோடு யான் மிகவும் நெருங்கிச் சம்பந்தப்படுகையில், எனக்குள் இந்தத் தீ மறுபடியுங் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியதை உணர்கின்றேன். இதனால் யான் சில நாட்கள் உம்மோடிருக்க விரும்புகின்றேன். யான் அறைகூவும் ஓசை இனி-”

ஆவேசக்காரன் : “அஃதின்னதென்று யான் அறியக் கூடவில்லை; ‘தனக்கே உரியதாக அரண்வகுத்துப் பாதுகாக்குஞ் செயல் ஒழியக் கடவது. ஆனால் இது போதுமான சொற்றொடரன்று' என்பது போலக் கேட்கின்றது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/82&oldid=1628595" இலிருந்து மீள்விக்கப்பட்டது