உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

105

'காமம்' என்னுஞ் சொல் இழிந்த இன்பத்தின் மேற்றாயும் உயர்ந்த இன்பத்தின் மேற்றாயும் வருதல் தெளியப்படு கின்றதன்றோ? அற்றேல், ஆசிரியர் தொல்காப்பியனார் அதனை உயர்ந்த வின்பத்தின் மேற்றாகவே வைத்துரைத்த தென்னையெனின்; அச்சொல் உயர்ந்த வின்பத்தினையும் உணர்த்துதற்கு உரிமை யுடைத்தென்பது மேலே நக்கீரனார் கூறியவுரையாற் றுணியக்கிடத்தலின், அன்பினைந்திணை யொழுக்கத்தைக் கூறுந் தமது மேற்கோளுக்கு இசைய ஆசிரியர் அச்சொல்லைக் காதலின்பத்தின்பாற் படுத்துச் சூத்திரஞ் செய்தருளினார். ஒரு நூலுள் வரும் ஒரு சொல்லுக்குப் பொருடுணியும்வழி, அந்நூல் யாத்த ஆசிரியன் கருத்தறிந்து அதற்குப் பொருள்கொள்ளல் வேண்டுமேயல்லாது, தமக்குத் தோன்றியவாறெல்லாம் அதற்குப் பொருளுரைப்பது சிறிதும் முறையாகாதென்க.

இனி, ஆசிரியர் திருவள்ளுவனாரோ காமம் என்னுஞ் சொல்லுக்கு உயர்பொருள் இழிபொருள் இரண்டுங் கொண்டிருக்க, அதனை ஆராய்ந்து பாராத அம்மறுப்புரைக் காரர் அச்சொல்லுக்கு அவர் உயர்பொருளே கொண்டா ரெனப் பிழைபடக் கூறினார். திருவள்ளுவனார், ‘காமத்துப் பாலில்' மட்டும் அதற் குயர்வுபொருள் கொண்டு, துறவறவியல் 'மெய்யுணர்தல்’ அதிகாரத்திற்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்'

என அதற்கு இழிவுபொருள் கொண்டார். ஆகவே, யாம் மெய்யன்பின்வழி நிகழும் உயர்ந்த காமவின்பத்தைக் ‘காதல்’ என்றதும், அம்மெய்யன் பின்வழி நிகழாது வெற்றுடம்பின் சேர்க்கையளவாய் நிகழ்வதனை ‘இழிந்த காமம்' என்றதுங் தொல்லாசிரியர் வழக்கோடு ஒருங்கொத்த முடிபாகலின், இஃதுணராது ‘காமம்’ என்னுஞ் சொல் உயர்ந்த வின்பத்தினையே யுணர்த்து மென்ற அம்மறுப்புரைக்காரர் கூற்று உள்ளீடில்லா வெறும் பதடியாய் ஒழிந்ததென்றறிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/138&oldid=1592360" இலிருந்து மீள்விக்கப்பட்டது