உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

127

தடுத்தாட்கொண்டனன் என்னும் அக்கதை பொய்யேயாதல் திண்ணம். அற்றன்று, திருக்கைலையில் தாம் இறைவனை வேண்டியதனை மறந்து சுந்தரர் திருமணப்பந்தலில் வன்மைகள் பேசினமைபற்றியே வன்றொண்டர் எனப்பட்டாரெனின்; றைவனுக்கு அணுங்கராய்த் திருக்கைலையில் தொண்டு செய்து கொண்டிருந்து இறைவனருளால் மண்ணின்மேற் சுந்தரர் பிறந்தது உண்மையாயின், முற்பிறவியிலே திருக்கைலையில் தாம் இறைவனை வேண்டிக் கொண்டதனை மறந்து வன்மைகள் பேசுதல் கூடுமோ? இம் மண்ணின் மேற் பிறந்த பொதுமக்களுள்ளேயே சிறுகுழந்தைகளா யிருப்பார் சிலர் தமது முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்து உரைத்தல், வடநாட்டின் கண் உள்ள ராமகாளி' முதலான சிறு குழந்தைகள் மாட்டு இன்றுங் கண்கூடாய்க் காணப்படுவதா யிருக்கச், சிவபிரானுக்கு அணுக்கரா யிருத்தற்குரிய அத்துணைப் பெருந்தவம் வாய்ந்த சுந்தரர் தமது முற்பிறவி வரலாற்றினை மறந்து போயினாரெனக் கூறுதல் ஒக்குமோ! அக் கதையிற் சொல்லப் பட்ட திருக்கைலை நிகழ்ச்சிகளைச் சுந்தரரே மறந்துபோயின ரென்றாற், பின்னர் இம் மண்ணுலகத்துள்ள அம்மறுப்புரை காரரும் அவரையொத்த ஏனைச் சிற்றறிவினரான மக்களும் அந் நிகழ்ச்சிகளை அறிந்ததெப்படி? வானுலகத்திற்கும் மண்ணுலகத் திற்குந் தபாற்கொண்டு செல்லுஞ் சேவகனாக நாரதனை யுண்டாக்கிக் கதைகள் கட்டிவிட்ட பார்ப்பனரும் அவர்வழிப் பட்டாருங், கைகலையின் நிகழ்ச்சிகளை மறுப்புரைகாரர் போல்வார்க்கு வந்து அறிவிக்க மற்றொரு நாரதனைக் கதை கட்டிச் சொல்ல மறந்துவிட்டமை பெரிதும் இரங்கத்தக்கதே! இப்போது ஐரோப்பிய நன்மக்களால் ஆராய்ந்து கண்டு நிறுவப்பட்டிருக்குங் கம்பியில்லாத் தபால் வாயிலாகவாவது அம்மறுப்புரைகாரரும் அவர்தந் தோழருந் திருக்கைலைக்குத் செய்தியனுப்பி, அங்கு நிகழ்ந்த சுந்தரர் கதை நிகழ்ச்சிகள் உண்மைதாமாவென்று தெரிந்து உலகிற்கு வெளியிடுவாராக! அவை ஆயிர ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தனவாகையால் இப்போது அவைகளைச் சிவபிரான் மறந்துபோயிருப்பர் என்று சிவபிரானுக்கும் அம் மறுப்புரைகாரர் மறதிக் குற்றத்தை ஏற்றமாட்டாரென்று நம்புகின்றேம்.

இனித், திருக்கைலையில் நிகழ்ந்தனவாக அக்கதை கூறும் நிகழ்ச்சிகள் உண்மையாயின், அங்கிருந்தும் இம்மண்ணுல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/160&oldid=1592448" இலிருந்து மீள்விக்கப்பட்டது