உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

17. சிவநேய அடியார் நேயங்கட்குச்

சாதி தடை

இனி, அப்பர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியன்மார் நடந்துகாட்டியபடி, நாமுஞ் சாதிவேற்றுமைகளைப் பாராது, சிவநேய அடியார் நேயங்களில் மிக்காருடன் உண்ணல் கலத்தல்களைச் செய்து உண்மையன்பினால் ஊடுருவப் பெற்றாலன்றிச், சாதிவேற்றுமைச் செருக்கினாற் சிறியராய் நிற்கும் நாம் அதனை யகன்று அன்பினாற் பெரியராய் நிற்கும் பேரின்ப நிலையினை எய்துதல் இயலாது என்று யாம் எமது தலைமைப் பேருரையில் மொழிந்திட்டேம். இதனை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைகாரர் உண்மையாகவே எமது கொள்கை யினை மறுக்க வேண்டினால், “சாதிவேற்றுமையினைச் சிதைத்த அப்பர் சுந்தரர் பெரியராகார், ஆகையால் அவர்போல் நடப்பது சாதியிற்பெரிய நமக்குச் சிறுமையே தருமல்லது பெருமை தராது; நாம் நமது சாதியுயர் வினையே விடாப்பிடியாய்ப் பாராட்டிக், கல்வியுஞ் சிவநேய அடியார் நேயமும் உடையராயினும் ஏனையெல்லாரையுங் கீழ்மக்களாகவே நடத்தி, அவரோடு உண்ணல்கலத்தல்களைச் செய்யாது அவரை யகன்று இறுமாந்தொழுகுதலே நாம் பெரியராதற்குத் தக்க வழியாகும்” என்றன்றோ மறுத்தெழுதல் வேண்டும்? அவ்வாறு செய்தால் உலகந்தம்மைப் பெரிது புறம்பழிக்கு மென்பதை நன்கு கண்ட அம் மறுப்புரைகாரர், இயைபில்லாதவைகளை யெழுதி மருட்டுகின்றார். இவரது மருட்டுரை சாதி வெறிபிடித்தார்பாலன்றி, உண்மையன்பு வாய்ந்தார்பாற் சொல்லாது. ஆயினும், அவர் உரைக்கும் போலியுரையின் பெற்றிமையினை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/170&oldid=1592490" இலிருந்து மீள்விக்கப்பட்டது