உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

18. அப்பர் முதலான சிலரின் துறவு

இனிப், பெளத்த சமண்மதங்கள் தமிழநாட்டிற் புகுந்து வைகிய பின்னர்த் தான், மனைவி மக்களைத் துறந்து போய் ஐயம் ஏற்றுண்டு பிழைக்கும் புறத்துறவு இந்நாட்டிலுள்ள சிலரால் மேற்கொள்ளப் படுவதாயிற்று என்றேம். மற்று, அம் மறுப்புரைகாரரோ, அப்பர் மாணிக்கவாசகர் பட்டினத்தார் கொண்ட துறவு, வேதத்தைத் சார்ந்த மிருதிநூல் வழியதே யன்றிப், பெளத்த சமண் வழியதன்று என்று ஏதொருசான்றுங் காட்டாது கூறினார். இருக்கு எசுர் முதலான வேதகாலத்துப் பழக்க வழக்கங்களும் அவ்வேதங்கட்குப் பன்னூறாண்டு பிற்பட்டு வந்த மிருதிநூற் கால பழக்க வழக்கங்களும் வேறு வேறாயிருத்தலை மறுப்புரைகாரர் சிறிதும் ஆராய்ந் துணர்ந்தவர் அல்லரென்பது, அவர் உரைக்கும் இப்போலி மறுப்புரையால் நன்கு புலனாகின்றது. இந்நூல் இன்னகாலத் தெழுந்தது, அக்காலத்து நிலை இன்னது, அக்கால இயல்புக்கும் அக் காலத்தில் உண்டான நூலியல்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை யின்னவையென்று உணரும் வரலாற்றுநூலுணர்ச்சி (historical knowledge) மறுப்புரைகாரர் சிறிதும் உடையரல் லாமையால், வேதத்தோடு இயைபில்லாத மிருதியை அதனோடு இயைபு படுத்தித் துணிபுரை கிளந்தார். அறியாமைக்கு உள்ள துணிபுதான் என்னே! இருக்குவேதத்தில் நுவலப்படும் முனிவரெல்லாரும் மனைவி மக்கள் முதலானாருடன் செல்வ வளத்தோடிருந்து இனிதுவாழும் மனைவாழ்க்கையினையே தாம் வழிபடு கடவுளர்பால் வேண்டக் கண்ட தல்லால், அவருள் ஒருவராயினும் அன்னாரைத் துறந்துறையும் வாழ்க்கையினை வேண்டக் காணேம். மற்றுப், பிற்காலத்தெழுந்த மிருதிநூல்களோ, துறவு மனைவி மக்களொடு கானகத்திருந்து மேற்கொள்ளப்படும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/186&oldid=1592521" இலிருந்து மீள்விக்கப்பட்டது